Published : 15 May 2022 01:30 AM
Last Updated : 15 May 2022 01:30 AM

இலங்கை: ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு: ரணில் விக்ரமசிங்க, இலங்கை பிரதமராக பதவியேற்று இரண்டு நாள் கழித்து அவரின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நெருக்கடியான சூழலில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர், ஏற்கனவே 5 முறை பிரதமராகவும், 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தனது பிரதமர் பதவி பணிகளை கவனிக்கத் தொடங்கியிருக்கும் அவர், நான்கு அமைச்சர்களை புதிதாக தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டுள்ளார். பொது நிர்வாக அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சராக பீரிஸ், நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

நேற்று நடந்த விழாவில் அதிபர் கோத்தபய ராஜபக்ச அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்துள்ளார். புதிதாக பதவியேற்றுக்கொண்டுள்ள இந்த நான்கு அமைச்சர்களும் கோத்தபய ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில் தனது பூர்வாங்க பணிகளுடன், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் முயன்று வருகிறார். ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல், மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்ச அலுவலகம் அருகே தொடர்ந்து போராட்டம் நடத்து வருகிறது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச விலகும் வரை போராட்டத்தை தொடர்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x