Published : 13 May 2022 04:01 PM
Last Updated : 13 May 2022 04:01 PM
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரை பகுதிகளில் மணல் மேடான சாலையில் சரிந்து கிடத்த ஷிரீனை காக்கும்படி அருகிலிருக்கும் மற்றொரு பெண் பத்திரிகையாளர் கதறுகிறார். அவர் ஷிரீன் உடல் அருகே செல்லும் போதெல்லாம் துப்பாக்கிச் சூடு சத்தம் தீவிரமாக கேட்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஷிரீனின் உடல் அருகே செல்கின்றார். பின்னர் அருகிலிருந்து பெண் பத்திரிகையாளர்களை அங்கிருக்கும் தடுப்பு சுவர் ஏறி தப்பிக்கச் சொல்கிறார். பின்னர் துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில் குனிந்தபடி ஷிரீனின் உடலை தாக்கிக் கொண்டுஅங்கிருந்து நகர்கிறார்.
இப்போது நான் கூறிய இந்தக் காட்சிகள்தான் அல் ஜசீரா பத்திரிகையாளர் ஷிரீனின் கடைசி நிமிடங்கள்.
இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஜெனின் பகுதியில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது ஷிரீன் இஸ்ரேல் ராணுவத்தால் தலையில் சூடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். போர் பதற்றம் அதிகமிக்க இடங்களில் பத்திரிகையாளர்கள் அணியும் ஹெல்மேட், கவச உடை என அனைத்தையும் ஷெரீன் அணிந்திருக்கிறார். அவரது கவச உடையில் ’PRESS’ என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதை எல்லாம் மீறியே ஷிரீன் கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அத்துமீறலை தகவல்களை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றதற்காகவே ஷிரீன் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் மற்றொரு பத்திரிகையாளரான அலி அல் சாமம்வுதியும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்ரேல் நடத்திய இந்த படுகொலை சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களிடத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இஸ்ரேலுக்கு வலுவான கண்டனங்களும் எழுந்து வருகின்றனர்.
ஷிரீனின் உயிரிழப்புக்கு இதுவரை இஸ்ரேல் சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. மாறாக நடந்த சண்டையில் ஷிரீன் பாலஸ்தீனத்தாலும் சுடப்பட்டிருக்கலாம் என்ற பொறுப்பற்ற பதிலையே எப்போதும் போல் இஸ்ரேல் வழங்கி இருக்கிறது. மேலும் ஷிரீனின் மரணம் குறித்து கூட்டு விசாரணைக்கு இஸ்ரேல் அனுமதி கோரி இருந்தது. ஆனால் இதனை பாலஸ்தீனம் மறுத்துவிட்டது.
யார் இந்த ஷிரீன் அபு அக்லே: ஷிரீன் ஜெருசலேமில் 1971 ஆம் ஆண்டு பிறந்தார். ஜோர்டானில் உள்ள யார்மவுக் பல்கலைகழகத்தில் இதழியல் பயின்றவர். இதழியல் முடிந்தவுடன் 1997 ஆம் ஆண்டு அல் ஜசீரா செய்தி நிறுவனத்தில் இணைகிறார்.
பாலஸ்தீன - அமெரிக்கரான ஷிரீன் அபு அக்லே 25 ஆண்டுகளாக அல் ஜசீரா செய்தி நிறுவனத்தில் பாலஸ்தீனத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தவர். 2008, 2009, 2012, 2014, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த காசா போரின் போது அங்கிருந்து செய்திகளை வழங்கியவர். தற்போது 51 வயதான ஷிரீன் பாலஸ்தீன மக்களின் குரல்களை தொடர்ந்து தைரியமாக பதிவு செய்து வந்தவர்.
2000 ஆம் ஆண்டிலிருந்து ஷிரீன் அபு அக்லே உட்பட இதுவரை 45 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
ஷிரீன் மரணமும், பாலஸ்தீனர்களும்: ஷிரீனின் மரணம் பாலஸ்தீனர்களின் நம்பிக்கையை சரித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்ட மக்களை ஓடி ஓடி சென்று பதிவுச் செய்தவர் ஷிரீன். குறிப்பாக பாலஸ்தீன பெண்களின் வேதனைகளை உலகின் முன் நிறுத்தியதில் ஷிரீனுக்கு முக்கிய பங்குண்டு. ஷிரீனின் இந்த மரணம் பாலஸ்தீன பெண்களை கைவிடப்பட்டவர்களாக உணரச் செய்துள்ளது என்றால் அவை மிகையல்ல.
ஷிரீன் கொல்லப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.காசாவில் பல்வேறு இடங்களில் அவருடைய ஓவியங்கள் வரைப்பட்டுள்ளன. ஷிரீனின் இறுதி ஊர்வலத்தில் நீதி நிச்சயம் பெறப்படும் என்று அந்த இளைஞர் கூட்டம் உறுதி மொழி எடுக்கிறது. அவரது பணியை தொடருவோம் என பாலஸ்தீன் பத்திரிகையாளர்கள் கோஷமிடுக்கின்றனர். இவற்றுக்கு நடுவேதான் ஷிரீனின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. ஷிரீனின் உடல் தாங்கிய சவப்பெட்டியை தாங்கிக் கொண்டிருந்தவர்களை நோக்கியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஷிரீனின் உடலை தாங்கிய சவப்பெட்டியும் சரிந்தது...
சவுதியின் பத்திரிக்கையாளர் ஜமால் காஷோகியின் மரணம் சர்வதேச அளவில் எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியதோ அதே அதிர்வலையை ஷிரீனின் மரணமும் எற்படுத்தி இருக்கிறது.
”நான் மக்களுடன் நெருக்கமாக இருக்கவே பத்திரிகை துறையை தேர்வு செய்தேன். யதார்த்தத்தை மாற்றுவது எளிதல்ல, ஆனால் குறைந்த பட்சம் மக்களின் குரலை உலகிற்கு கொண்டு வர முடியும். நான் ஷிரீன் அபு அக்லே.” ஓவ்வொரு முறையும் செய்தியை நிறைவு செய்யும்போது ஷிரீன் அபு அக்லே கூறிய வார்த்தை இவை.
தனது மரணத்தின் மூலமும் ஷிரீன் இதனையே நிகழ்த்தி இருக்கிறார்.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT