Published : 13 May 2022 07:47 AM
Last Updated : 13 May 2022 07:47 AM
ஹெல்சிங்கி: நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்துக்கு பின்லாந்து அதிபர் மற்றும் பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளனர்
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இப்போர் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனை போலவே ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தும் நேட்டோவில் சேர விரும்பியது.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு நேட்டோவில் சேர பின்லாந்து மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பின்லாந்து எம்பி.க்களில் பெரும்பாலானோர் அந்நாடு நேட்டோவில் இணைவதற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ, பிரதமர் சன்னா மரின் ஆகியோர் நேற்று கூட்டாக விடுத்த அறிக்கையில், “நேட்டோவில் சேர விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்தின் பாதுகாப்பு வலுவடையும். இதுபோல் நேட்டோ உறுப்பினராக ஒட்டுமொத்த ராணுவக் கூட்டணியை பின்லாந்து வலுப்படுத்தும். நேட்டோ உறுப்பினர் ஆக பின்லாந்து தாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு இன்னும் தேவையான தேசிய நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளனர்.
இதற்கு ரஷ்யா எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, “ரஷ்ய எல்லையை ஒட்டி நேட்டோ விரிவாக்கம் காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிபர் புதின் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். நேட்டோவில் பின்லாந்து சேருவதால் ரஷ்ய எல்லைக்கு அருகில் நேட்டோ எத்தகைய கட்டமைப்புகளை மேற்கொள்ளும் என்பதை பொறுத்தே ரஷ்யாவின் நடவடிக்கை இருக்கும்” என்றார்.
அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “நேட்டோ அமைப்பில் சேர பின்லாந்து முடிவு செய்திருப்பது ரஷ்யாவுக்கு நிச்சயம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதேநேரம் நேட்டோ அமைப்பை விரிவுபடுத்துவதால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஸ்திரத்தன்மை ஏற்படாது” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் 2 ஆயுதக் கிடங்குகளை தகர்த்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT