Published : 09 May 2022 10:59 AM
Last Updated : 09 May 2022 10:59 AM
பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக ஐ. நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா தெரிவித்துள்ளார்.
தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ. நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிய பெண்கள், சிறுமிகளுக்கு தலிபான்கள் அளித்த வாக்குறுதிகளையும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உங்கள் கடமைகளையும் நீங்கள் காப்பாற்ற வேண்டும்.
பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் தலிபான்கள் அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும், சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் தலிபான்கள் தங்கள் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT