Published : 09 May 2022 10:35 AM
Last Updated : 09 May 2022 10:35 AM
"ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்... இதை அறிந்துகொண்டதும் நல்லதே" என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முக்கியமானவருமான எலான் மஸ்க் அண்மையில் ட்வீட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் ட்வீட்கள் மீது எப்போதுமே தனிக்கவனம் இருக்கும். அந்த வகையில், இன்று காலை அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்... இதை அறிந்துகொண்டதும் நல்லதே" என்று பதிவிட்டிருக்கிறார்.
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
அந்த ட்வீட்டிற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக அவர் ஒரு ட்வீட்டை பகிர்ந்திருந்தார். அதில், அவருடைய ஸ்டார் லிங்க் நிறுவனம் உக்ரைனுக்கு தொலைதொடர்பு சாதனங்களை வழங்கிவருவதாகவும். அந்த தவறுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.
மேலும், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வாயிலாகவே ஸ்டார்லிங்கின் தொலைதொடர்பு உபகரணங்கள் உக்ரைன் வீரர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும். உக்ரைன் நாசிகளுக்கு உதவி விளையாட்டு காட்டுவதற்கு எலான் மஸ்க் விலை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
.@Rogozin sent this to Russian media pic.twitter.com/eMI08NnSby
— Elon Musk (@elonmusk) May 9, 2022
இந்நிலையில் மஸ்க் "ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்... இதை அறிந்துகொண்டதும் நல்லதே" என்று ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி வருவதால் எலான் மஸ்குக்கு ரஷ்யாவால் ஆபத்து இருக்குமோ என்ற சந்தேகங்களை இந்த ட்வீட் கிளப்புவதாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஒரு சில தினங்களிலேயே உக்ரைனின் இணைய சேவை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குலேபா, எலான் மஸ்க்கை ட்விட்டரில் டேக் செய்து உதவி கோரியிருந்தார். அன்றைய தினமே உடனே ஸ்டார்லிங்க் தொலைதொடர்பு சேவைகளை இலவசமாக உக்ரைனுக்கு எலான் மஸ்க் வழங்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் தான் ரஷ்ய மொழியில் வந்த அச்சுறுத்தலும் அதற்கு மஸ்க் ஆற்றிய எதிர்வினையும் கவனம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT