Published : 09 May 2022 06:02 AM
Last Updated : 09 May 2022 06:02 AM
புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மின்னணு கருவிகளில் இருந்து ரகசிய தகவலை திருடுவதற்காக ஒரு முகநூல் பக்கத்தை பாகிஸ்தானின் உளவுத் துறை (ஐஎஸ்ஐ) உருவாக்கியுள்ளது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்துகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவதற்காக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, முகநூலில் ஷாந்தி படேல் என்ற பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஐஎஸ்ஐ உளவாளிகள், பாதுகாப்புத் துறை மற்றும் அதன்அதிகாரிகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் நட்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
பின்னர் அவர்கள் பயன்படுத்தும் கணினிகள், செல்போன்கள், மடிகணினி மற்றும் இதர மின்னணு கருவிகளில், அவர்களுக்கு தெரியாமல் ஒரு மென்பொருளை (மால்வேர்) புகுத்தி ரகசிய தகவலை திருடுவார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர காவல் துறை ரகசியங்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, ஐஎஸ்ஐ அமைப்பின் இந்த சதித் திட்டம் அம்பலமானது. இந்த சம்பவம் மட்டுமல்லாது வேறு சில சம்பவங்களின் அடிப்படையில், முகநூல், இன்ஸ்டாகிராம், கேமிங்செயலி உட்பட மொத்தம் 89 சமூகவலைதள கணக்குகளை மின்னணுகருவிகளிலிருந்து நீக்குமாறு வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பாதுகாப்புத் துறை உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில், ஆந்திர காவல் துறை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் திருட்டு விவகாரத்தில் தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ உள்ள தொடர்புகள் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
அலுவல் ரகசிய சட்டம்(ஓஎஸ்ஏ), சட்டவிரோத செயல்தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல்ஆகியவற்றின் கீழ் என்ஐஏ விசாரணை நடத்துகிறது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment