Published : 07 May 2022 07:16 AM
Last Updated : 07 May 2022 07:16 AM

25 ஆயிரம் ரஷ்ய வீரர்கள், 1,110 பீரங்கி அழிப்பு: உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

கீவ்: போரில் ரஷ்யாவின் 24,900 படை வீரர்கள், 1,110 பீரங்கிகளை அழித்துள்ளோம் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது. அப்படி நேட்டோவில் சேர்ந்தால், அது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா கூறியது. மேலும், நேட்டோவில் சேரக் கூடாது என்று உக்ரைனை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். அதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் நேற்றும் 72-வது நாளாக நீடித்தது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. ஐரோப்பிய, அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை விநியோகிக்கும் ரயில் நிலையங்கள், உருக்கு ஆலை, வானுயர்ந்த கட்டிடங்கள் என முக்கிய உள்கட்டமைப்புகளை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளன. எனினும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து கடும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் டவிட்டரில் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

எங்கள் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்.

இதுவரை 24,900 ரஷ்ய வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளனர். 1,110 பீரங்கிகள், 199 விமானங்களை அழித்துள்ளோம். மேலும் 155 ஹெலிகாப்டர்கள், 2,686 கவச வாகனங்கள், 502 வெடிகுண்டு வீசும் சாதனங்களை அழித்துள்ளோம்.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் 1,900 வாகனங்கள், எரிபொருள் டேங்குகளையும் அழித்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ரஷ்யாவின் மரியுபோல் நகரில் உள்ள அஸோவ்ஸ்டால் ஸ்டீல் தொழிற்சாலை மீது தொடர்ந்து 2-வது நாளாக ரஷ்ய ராணுவம் நேற்றும் தரைவழித் தாக்குதல் நடத்தியது.

கிராமடார்ஸ்க் நகரிலுள்ள மிகப்பெரிய ஆயுதக் கிடங்கையும் ஏவுகணைகள் மூலம் அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் லுஹான்ஸ்க் பகுதியில், உக்ரைனின் எஸ்யு-25, மிக்-29 ஆகிய 2 போர் விமானங்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. போர் தொடரும் நிலையில், ரஷ்யா அணு ஆயுதம் பயன்படுத்த கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x