Published : 06 May 2022 09:02 AM
Last Updated : 06 May 2022 09:02 AM
உலக மக்களின் நலனுக்காக ரஷ்யா உடனடியாக உக்ரைனுடனான போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இதன் விளைவாக உலகம் முழுவதும் எரிபொருள் விலையேற்றம், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு இன்னும் பிற வர்த்தக, பொருளாதார சிக்கல்கள் உருவாகியுள்ளன. ரஷ்ய கோதுமை இறக்குமதியை நம்பியிருந்த ஏற்கெனவே வறுமையில் வாடும் எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் பல பெரும் சிக்கலில் உள்ளன.
இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் ரஷ்யா, உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடங்கியுள்ளது. உணவுப் பொருள், எரிபொருள் என உக்ரைன்-ரஷ்யா போர் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வியாழனன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது. அதில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், "உலக மக்களின் நலனுக்காக ரஷ்யா உடனடியாக உக்ரைனுடனான போரை நிறுத்த வேண்டும். ரஷ்யாவின் படையெடுப்பு ஐ.நா. சாசனத்தின்படி உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடுக்கு எதிரானது. உக்ரைன், ரஷ்யா மக்களுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களுக்காகவும் இந்தப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்" என்றார்.
முன்னதாக, அண்டோனியோ குத்ரேஸ் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கும், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கும் சென்றிருந்தார். அப்போது அவர் உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து மரியுபோலில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்போது வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ், மெக்சிகோ ஆகிய நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தின. சீன தூதர் ஜேங் ஜுன் பேசுகையில், "உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும். அந்நாட்டுக்கு ஆயுதங்களை வாரிவழங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது" என்றார். கென்ய தூதர் மார்டின் கிமானி, "உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் ஐ.நா. தலைவர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்" என்று கூறினார். உக்ரைனின் ஐ.நா தூதர் செர்க்டெ கிஸ்லிட்ஸியா, "அமைதியை நிலைநாட்ட எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமல்லாது பிற நாடுகளும் தங்களின் அக்கறையைப் பதிவு செய்தன. நார்வே, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டி அறிக்கைகளை சமர்ப்பித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT