Published : 06 May 2022 05:52 AM
Last Updated : 06 May 2022 05:52 AM

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க முழு ஆதரவு: நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் உறுதி

பாரீஸ்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர ஆதரவு தெரிவிப்போம் என பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார். அணுசக்தி மூலப் பொருட்கள் விநியோகிக்கும் நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா நுழையவும் ஆதரவு அளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார். ஜெர்மனி, டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கு அதிபர் இம்மானுவல் மேக்ரானை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகள், உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

இந்தியா - பிரான்ஸ் இடையேயான பாதுகாப்பு கூட்டுறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இவற்றுக்கு மட்டுமே முக்கிய தீர்மானங்களில் முடிவெடுக்க வீட்டோ அதிகாரம் உள்ளது. மேலும், 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. பொது சபையால் தேர்வு செய்யப்படுகின்றன.

உலகின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல நாடுகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கான தகுதி உள்ளதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இணைந்து, அணுசக்தி தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட இந்தியா விரும்புகிறது. ஆனால், அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாமல் உள்ளது. இதையே காரணம் காட்டி, என்எஸ்ஜி குழுவில் இந்தியா இணைய சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் குழுவில் எல்லா முடிவுகளுமே ஒருமனதாக எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேரவும், என்எஸ்ஜி குழுவில் நுழையவும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதை அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஏற்றுக்கொண்டார். இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிய பின்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேரவும், என்எஸ்ஜி குழுவில் நுழையவும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவிப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது. மேலும், ஜி-20 அமைப்பில் வலுவான ஒருங்கிணைப்புடன் செயல்படவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் ஆலோசனை

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, உடனடியாக தனது அலுவலகத்துக்கு சென்றார். நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் வெயில் மற்றும் பருவமழையை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து உயர்நிலை ஆலோசனை கூட்டத்தை நேற்று மாலை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: கடும் வெயில், அனல் காற்று அல்லது தீ விபத்து சம்பவங்களால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முழுமையான முயற்சிகள் தேவை. பருவமழை தொடங்க உள்ளதால், வெள்ளத் தடுப்பு திட்டங்களை மாநிலங்கள் தயாரிக்க வேண்டும்.

கடலோர பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகளை சரியான நேரத்தில் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்களுக்கு வானிலை தகவல்களை தெரிவிக்க சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x