Published : 02 May 2022 11:49 AM
Last Updated : 02 May 2022 11:49 AM
இஸ்லாமாபாத்: கடும் நிதிநெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.61 ஆயிரத்து 218 கோடி நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் நிதியமைச்சர் சவுதி அரேபியாவில் தங்கியுள்ளார்.
பாகிஸ்தானிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், கடுமையான விலை உயர்வாலும் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். ஆனாலும் பொருளாதார நெருக்கடி பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது.
பாகிஸ்தானில் நிலக்கரி வாங்க அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் கடுமையான மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி முடங்கியுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார்.
பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.61 ஆயிரத்து 218 கோடி) நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானுக்கான எண்ணெய் நிதியை 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2.4 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. அதனையும் செய்வதாக சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது.
இருப்பினும் இதற்கான தொழில்நுட்ப விவரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து கையொப்பமிட இரண்டு வாரங்கள் ஆகும் என தெரிகிறது.
ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவினர் சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தான் திரும்பி விட்டனர். ஆனால் பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் இன்னும் கடன் வாங்கி வருவதற்கான நடைமுறைகளை இறுதி செய்வதற்காக அங்கேயே தங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பிற சகாக்களிடம் ஜெட்டா விமான நிலையத்தில் விடைபெற்றேன். அவர்கள் அபுதாபியில் சிறிது நேரம் நிறுத்திவிட்டு இஸ்லாமாபாத்திற்குச் செல்கின்றனர். சவுதி அதிகாரிகளைச் சந்தித்து தொழில்நுட்ப விவரங்களை இறுதி செய்ய சவுதி அரேபியாவில் தங்கியுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment