Published : 28 Apr 2022 11:59 PM
Last Updated : 28 Apr 2022 11:59 PM
புதுடெல்லி: பயங்கரவாதம் இல்லாத சூழல் நிலவும் போது மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கூறியதாவது, "கராச்சியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. எல்லாவகையான பயங்கரவாதத்திற்கும் எதிரான இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கிறது.
பாகிஸ்தானுடனான இந்தியாவின் அணுகுமுறை மிகவும் எளிமையானது. பயங்கரவாதம் இல்லாத சூழல் நிலவும்போது தான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமாகும். இரு நாட்டு பிரதமர்களுக்கிடையில் மரியாதை நிமித்தமாக கடிதப் பரிமாற்றம் நடைபெற்றது. பயங்கரவாதம் இல்லாத சூழல் உருவாக வேண்டும் என்பது இந்தியாவின் எளிமையான கோரிக்கை. அத்தகைய சூழல் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றதும் பிரதமர் மோடி ஷெரீபிற்கு எழுதிய கடிதத்தில் பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான உறவை இந்தியா விரும்புவதாக தெரிவித்திருந்தார். அதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அனுப்பிய பதில் கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையில் அர்த்தமுள்ள உடன்படிக்கைக்கு முன்மொழிந்திருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம் ஒன்றின் மீது இந்தியாவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாக இந்தியா அறிவித்த பின்னர் இருநாடுகளின் உறவுகள் மேலும் மோசமடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT