Published : 22 Apr 2022 01:44 PM
Last Updated : 22 Apr 2022 01:44 PM
இஸ்லாமாபாத்: இந்தியாவை பணிய வைக்க முடியாத அமெரிக்கா பாகிஸ்தானை மட்டுமே மிரட்டுகிறது, இதற்கு இந்தியாவின் சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கையே காரணம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் இந்தியாவை பாராட்டியுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒருமுறை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், "புதுடெல்லியின் முடிவு அதன் மக்களின் நலனுக்கானது" என்று கூறினார்.
பாகிஸ்தானில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதையடுத்து இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பதவியேற்றுள்ளார்.
அவர் பிரதமராக இருந்த கடைசி காலத்தில் இந்தியாவின் பல்வேறு கொள்கைகளை ஆதரித்தும், பாகிஸ்தான் ராணுவத்தின் தலையீட்டை கண்டித்தும் பேசினார். கைபர் பக்துன்வாகா மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் ‘‘எப்போதும் தனிப்பட்ட வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். இந்தியா தற்போது அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் மூன்று தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது. ஆனால் பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது.
அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ராணுவம் தலையிடுவது இல்லை. இதனால் அந்நாடு சுதந்திரமான முடிவுகளை எடுக்கிறது’’ எனக் கூறினார். இம்ரான் கான் இந்தியாவின் கொள்கைகளை ஆதரித்து பேசியது பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் பாராட்டு
இந்தநிலையில் லாகூரில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
அமெரிக்காவுடன் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்பட்டு கூட்டாளியாக இருக்கும் இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. ஆனால் இதனை அமெரிக்கா எதிர்க்கவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அதன் முடிவுகள் அங்குள்ள மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் நமது வெளியுறவுக் கொள்கை மற்றவர்களின் நலனுக்காக உருவாக்கப்படுகிறது. ரஷ்யா 30 சதவீதம் தள்ளுபடியில் எண்ணெய் வழங்கியதால் நான் ரஷ்யா சென்றேன்.
பாகிஸ்தானுக்கான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நான் பின்பற்றியதால் தான் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். நான் மக்களுக்காக கொள்கை முடிவெடுப்பது சர்வதேச சக்திகளுக்கு பிடிக்கவில்லை.
உலக நாடுகளுடன் சேர்ந்து உள்ளூர் மிர் ஜாபர்ஸ் மற்றும் மீர் சாதிக்கள் இணைந்து எனது அரசை வீழ்த்தி விட்டனர். பொருளாதாரம் மேம்பட்டு இருந்தபோது ஏற்றுமதி சாதனையாக இருந்தது. இவை அனைத்தும் கரோனா பரவல் காலத்தில் குறைந்து போனது.
மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் இணையமைச்ச் டொனால்டு அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து மிரட்டினார். அமெரிக்காவின் நல்லெண்ணத்தை பாகிஸ்தான் மீண்டும் பெற வேண்டுமென்றால் இம்ரான் கான் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் தூதரிடம் மறைமுகமாக மிரட்டியுள்ளார்.
என்ன தவறு செய்தோம்?
நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? நான் ரஷ்யாவுக்குச் சென்றதா? அல்லது நாங்கள் ராணுவத் தளங்களைத் உங்களுக்கு தரமாட்டோம் என்று சொன்னோமா? அவர்களுக்கு இதுபோன்று மிரட்டும் தவறான எண்ணங்கள் எங்கிருந்து வந்தன. ஆனால் அவர்களால் இதனை இந்தியாவிடம் செய்ய முடியாது.
சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இவையெல்லாம் அவர்களுக்குப் பிடிக்காததால் எனக்கு எதிராக ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், மிர் ஜாபர்கள் மற்றும் மீர் சாதிக்குகள் ஆதரவு இல்லாமல் இந்த சதி வெற்றியடைந்திருக்காது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி மற்றும் ஜேயுஐஎப் தலைவர் மௌலானா பஸ்லுர் ரஹ்மான் ஆகிய மூன்று பேரை கைக்கூலிகளாக வைத்துக் கொண்டு வெளிநாட்டு சக்திகள் பாகிஸ்தான் அரசை நடந்துகின்றன. பொருளாதார நெருக்கடிக்கிடையே சற்று வளர்ச்சி உருவான நேரத்தில் எனது அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது.
எங்கள் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் குறைவாக இருந்தது. நாங்கள் எல்லோரையும் விட முன்னோடியாக இருந்தோம். எங்கள் அரசும் கரோனாவை முன்மாதிரியாகக் கையாண்டது. நாங்கள் ஏழை மக்களின் உயிரையும் ஏழைகளின் வேலையையும் காப்பாற்றினோம்.
இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT