Published : 13 Apr 2022 03:47 PM
Last Updated : 13 Apr 2022 03:47 PM
கொழும்பு: அத்தியாவசியத் தேவைகளான உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் வாங்க வெளிநாட்டில் வாழும் இலங்கை மக்கள் தங்களின் வீடுகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை அரசு தனக்கிருக்கும், 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக்கடனை திருப்பிச் செலுத்த முடியாது என நேற்று (செவ்வாய்கிழமை) அறிவித்திருந்தது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை மக்கள் சொந்தநாட்டிற்கு பணம் அனுப்பி உதவ வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று புதன்கிழமை மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வர வெளிநாட்டில் வாழும் இலங்கை மக்களின் உதவி தேவைப்படுகிறது. இலங்கைக்கு தேவையான அந்நியச் செலாவணியை அவர்கள் நன்கொடையாக வழங்க வேண்டும். நன்கொடை வழங்குவதற்கு வசதியாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனுப்பும் பணம் தேவைப்படும் இடங்களில் மட்டுமே செலவழிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அந்நியச்செலாவணி பணம், உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய வங்கி உறுதியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரின் இந்த வேண்டுகோள் வெளிநாடு வாழ் இலங்கை மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்து அதேவேளையில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கை மருத்துவர் ஒருவர் கூறும்போது, "இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் பண விஷயத்தில் அரசாங்கசத்தை நம்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார். அதேபோல கனடாவில் வசித்துவரும் இலங்கை மென்பொருள் பொறியாளர் ஒருவர், "நாங்கள் அனுப்பும் பணம் தேவைப்படுபவர்களுக்கு செலவளிக்கப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சுனாமி நிதியைப் போல இந்த நிதியும் வேறு இடத்திற்குச் செல்லலாம்" என்று கூறியுள்ளார்.
இலங்கை தீவில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னர் சுற்றுலா முடக்கம், அந்நியசெலாவணி குறைவு காரணமாக, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்தமுடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனால் நீண்ட மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த போது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறைந்த அந்நியச் செலாவணியைக் காப்பாற்றவும், செலுத்தப்படாத கடன்களைச் செலுத்த அதனைப் பயன்படுத்தவும் இலங்கை அரசு இறக்குமதிக்கு தடைவிதித்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஆளும் அரசு பதவி விலக வேண்டும் என்றும், "வீட்டுக்குப் போ கோத்தாபய" என்றும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று புதன்கிழமை ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT