Published : 12 Apr 2022 06:27 PM
Last Updated : 12 Apr 2022 06:27 PM
வாஷிங்டன்: இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டு பத்திரிகை சந்திப்பில் ஆண்டனி பிளிங்கன் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் கூறும்போது, “ மனித உரிமைகள் பாதுகாப்பு போன்ற ஜனநாயக விழுமியங்களுக்கான உறுதிப்பாட்டை நாங்கள் இந்தியாவுடன்பகிர்ந்து கொள்கிறோம். அது தொடரும்.எனினும் இந்தியாவில் சமீப காலமாக அரசு, காவல்துறை, சிறைத் துறை அதிகாரிகள் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கூடுதல் தகவல் எதையும் அவர் அளிக்கவில்லை. இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், இல்ஹான் உமர், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கையில் இறங்குவதாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் பிளிங்கன் இதனை தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது வெறுப்புத் தாக்குதல்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT