Published : 12 Apr 2022 04:59 PM
Last Updated : 12 Apr 2022 04:59 PM
கொழம்பு: உயிர் காக்கும் மருந்துகள் குறைந்து வருவதால் இலங்கையில் பெரும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை முழுவதும் மாரடைப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், சுவாசம் அளிக்க உதவும் குழாய்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறும்போது, “இலங்கையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல மருத்துவமனைகள் வழக்கமான அறுவை சிகிச்சைகளை நிறுத்திவிட்டன. அத்துடன், ஆய்வக சோதனைகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைத்து வருகிறது.
அரசிற்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து மருத்துவமனைகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமை மோசமாகலாம். மக்கள் இறக்கலாம். ஆனால், அரசு இதுகுறித்து கவலை கொள்கிறதா? என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் லக்குமார் பெர்னாட்டோ அளித்த பேட்டியில், ”இப்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால், சில மாதங்களுக்கு முன்பிருந்ததை விட இறப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அனைத்து மருத்துவமனைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் இலங்கையில் 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. 140 முக்கிய மருந்துகளின் இருப்புக்கள் குறைந்துள்ளன” என்றார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 13 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்த நிலையில், இலங்கை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இடைக்கால அமைச்சரவையைக் கொண்டு கோத்தபய ஆட்சியை நடத்தி வருகிறார். அதேவேளையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT