Published : 12 Apr 2022 01:00 AM
Last Updated : 12 Apr 2022 01:00 AM
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அமைதி சாத்தியமில்லை என்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்தஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய ஷெபாஸ் ஷெரீப் இந்தியா குறித்தும் பேசினார்.
அதில், "அண்டை நாடு என்பது நம் வாழ்வை சார்ந்தது தான். துரதிர்ஷ்டவசமாக, கடந்த காலங்களில் இந்தியாவுடனான பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த முடியவில்லை. இந்தியாவுடன் நல்ல உறவையே விரும்புகிறோம். ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அமைதியை விவாதிக்க முடியாது. காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், காஷ்மீர் சகோதர சகோதரிகளுக்கு பாகிஸ்தான் தனது தார்மீக ஆதரவை வழங்கும்" என்றவர் பிரதமர் மோடி சில கோரிக்கைகளையும் விடுத்தார்.
அதில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வேலையின்மை, சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார சவால்கள் உள்ளன. நாம் ஏன் நமது வருங்கால சந்ததியினருக்கு பாதகமான விஷயங்களை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கேற்றவாறு காஷ்மீர் பிரச்சினையை முடிவு செய்வோம். இருநாடுகள் உடனான மோதலை முடிவுக்கு கொண்டுவந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம்." இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் இந்தியா குறித்து தனது முதல் நாடாளுமன்ற உரையில் வெளிப்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT