Published : 11 Apr 2022 05:58 PM
Last Updated : 11 Apr 2022 05:58 PM

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு: இம்ரான் கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பு 23- வது பிரதமராக தேர்வாகியுள்ளார்.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்தஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது.

இந்த தீர்மானத்தை நாடாளு மன்ற துணை சபாநாயகர் குவாசிம்கான் கடந்த 3-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இம்ரான்கானின் பரிந்துரையின் பேரில் அதிபர் ஆரிப் ஆல்வி, நாடாளுமன்றத்தை கலைத்தார். ஆனால் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி நீண்ட இழுபறிக்கு பின்பு நடந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பை நடத்தினர். தீர்மானம் வெற்றி பெற 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 174 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி உட்பட 11 எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக கைகோத்தன. எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நாடாளுமன்ற செயலாளரிடம் முறைப்படி நேற்று மனு தாக்கல் செய்தார். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் அதன் துணைத் தலைவர் ஷா மெகமூத் குரேஷியும் மனு தாக்கல் செய்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே முஸ்லிம் லீக் தொண்டர்

ஆனால் தேர்வு நடைபெறும் முன்பாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மொத்தமாக ராஜினாமா செய்தனர். பின்னர் நாடாளுமன்றம் கூடிய நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷெபாஸ் ஷெரீப் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியாவார். 70 வயதாகும் ஷெபாஸ் ஷெரீப் முன்னாள் இம்ரான் கானை வீழ்த்துவதற்கு ஒன்றுபட்ட எதிர்கட்சியின் தலைவராக உருவெடுத்தார்.நவாஸ் ஷெரீப் 2017 இல் ஊழல் குற்றச்சாட்டுகளால் பிரதமர் பதவியை வகிக்க உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டார். பின்னர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து சில மாதங்கள் கழித்து மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். தம்பி பிரதமராகும் சூழலில் விரைவில் அவர் நாடு திரும்பவுள்ளார். புதிய பிரதமர் தேர்வு மூலம் பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரகாலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x