Published : 11 Apr 2022 12:07 AM
Last Updated : 11 Apr 2022 12:07 AM

இலங்கையில் கரோனாவை விட பொருளாதார நெருக்கடியால் அதிக உயிரிழப்பு அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

கொழும்பு: இலங்கை மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளின் கையிருப்பு ஏறக்குறைய தீர்ந்து விட்டதாகவும், இதனால் இந்தப் பொருளாதார நெருக்கடி கோவிட்-19 மரணங்களை விட அதிமான மரணங்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடந்த சில வாரங்களாக நீண்ட நேரம் மின்வெட்டு, உணவு, மருத்துவப் பொருள்கள் மற்றும் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில், நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கருவிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இனி பயன்படுத்த முடியாது என இலங்கை மருத்துவச் சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவ நெருக்கடி குறித்து எச்சரித்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு அனுப்பிய கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மருத்துவச் சங்கத்தின் மருத்துவர்கள் குழு ஒன்று, "ஏற்கெனவே மருத்துவமனைகளில் பல வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மயக்கமருந்து பற்றாகுறையால் கடந்த மாதத்தில் இருந்து வழக்கமான அறுவை சிகிச்சைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் கூட செய்யமுடியாத நிலை ஏற்படலாம்.

இனி யாருக்கு சிகிச்சை தர வேண்டும். யாருக்கு சிகிச்சை தரக்கூடாது என்ற கடுமையான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்னும் சில நாட்களுக்குள் மருத்துவ பொருள்கள் இறக்குமதி செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பாவிட்டால், கோவிட் 19 மரணங்களை விட அதிக மரணங்கள் இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக்கோரி அதிபர் மாளிகைக்கு எதிராக இரண்டாவது நாளாக கொட்டும் மழையிலும் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க 42 சுயேட்சை எம்பிகள் உள்ளிட்ட 11 கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில், நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்து விட்டு, புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு எம்பிகள் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னர் நாடு சந்தித்து வரும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலையில், பிரதமர், அதிபரைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் கடந்த வாரம் கூண்டோடு ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x