Published : 09 Apr 2022 05:29 PM
Last Updated : 09 Apr 2022 05:29 PM
கொழும்பு: பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்காக உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் செயல்பட முடியாமல் தவிக்கும் இலங்கை, கூடுதலாக 500 மில்லியன் டாலர்கள் கடன் வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் என இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசலை உடனடியாக வழங்கியது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.
நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்க இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவினால் எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 500 மில்லியன் டாலர் தொகை கடன் வரம்பில் வழங்கி வருகிறது. இதன்படி ஏப்ரல் 15-ம் தேதி, 18-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஆகிய தேதிகளில் மூன்று 40,000 டன் டீசலை இந்தியா அனுப்ப உள்ளது. அதே அளவிலான பெட்ரோல் ஏப்ரல் 22 ஆம் தேதி அனுப்பப்படுகிறது.
ஆனால் இந்தியா ஏற்கெனவே வழங்கிய பெட்ரோல், டீசலுக்காக வழங்கப்பட்ட காலக்கெடு இந்த மாதத்துடன் முடிவடைகிறது. ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த மாத இறுதிக்குள் எரிபொருளுக்கான கடன் தொகையை பகுதி வாரியாக தவணைப்படி இந்தியாவிடம் இலங்கை வழங்க வேண்டும்.
கெடு முடிவடையும் நிலையில் இந்தியா தந்துள்ள கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது ஏற்கெனவே வழங்கிய கடன் கெடு முடிவடையாமல் முன்கூட்டியே கூடுதலாக டீசல், பெட்ரோல் மற்றும் மருந்து பொருட்களை தருமாறு கோரிக்கை விடுக்கிறது.
இதுதொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கும் நடவடிக்கையை நிறுத்திக் கொள் நேரிடும். அவ்வாறு நடந்தால் ஏப்ரல் மாத இறுதியில் மீண்டும் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.
சுழற்சிமுறையில் கடன் வரம்புக்குட்பட்டு இலங்கை செயல்படாவிட்டால் அந்நாட்டுக்கு பெட்ரோல், டீசல் வழங்கி வரும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் கையிருப்பு குறைந்து கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. எனவே இலங்கையின் கடன் வரம்பை உடனடியாக உயர்த்துவதில் இந்தியாவுக்கு தயக்கம் இருப்பதாக தெரிகிறது.
இந்தநிலையில் கடன் வரம்பை மேலும் 500 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரித்து தந்தாக வேண்டும் என அந்நாட்டின் நிதியமைச்சர் அலி சப்ரி வலியறுத்தியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இவர் 24 மணிநேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் நேற்று மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் கூறியுள்ளதாவது:
இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர் கடன் வரம்பை இலங்கை கோருகிறது. இது ஐந்து வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும். இந்த உதவியை எங்களுக்கு செய்ய வேண்டும் என கோருகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை.
இதுமட்டுமின்றி ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடமும் உதவி கோரியுள்ளோம். நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியும். போராட்டத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது.
சீனாவிடம் 1.5 பில்லியன் டாலர் கடன், 1 பில்லியன் டாலர் வரையிலான ஒருங்கிணைந்த கடன் மற்றும் ஏற்கெனவே பெற்ற சில கடனை மறுசீரமைக்க பேசி வருகிறோம். ஜனவரி மாதம் முதலே இதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எங்களால் சில உதவிகளை பெற முடியும் என்று நம்புகிறோம். இந்த உதவி கிடைத்தால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை மீட்க உதவும். நாங்கள் ஒரு நடுநிலை நாடு. நாங்கள் அனைவருக்கும் நண்பர்களாக இருக்கிறோம். பெரும் பாதிப்பை சந்தித்து வரும் இந்த நேரத்தில் நல்லெண்ண உறவுகள் கொடுக்கும் என திடமாக நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT