Published : 09 Apr 2022 02:46 AM
Last Updated : 09 Apr 2022 02:46 AM
கராச்சி: 'எந்தவொரு வல்லரசும் இந்தியாவுக்கு ஆணைகளை இட முடியாது' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 28-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
வழக்கின் முடிவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய இம்ரான் கான் தனது பேச்சில் இந்தியா குறித்தும் குறிப்பிட்டார். அதில், "பாகிஸ்தான், ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் நமக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் இந்தியா இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களால் இதே அழுத்தத்தை இந்தியாவுக்கு கொடுக்க அவர்களுக்கு துணிவில்லை.
இன்னொரு நாட்டிற்காக நமது மக்களை இறக்க அனுமதிக்க முடியாது. நம் வெளியுறவுக் கொள்கை இறையாண்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த எந்த வல்லரசு நாடும் முயற்சிக்காது. மக்களின் நலன்களைக் காரணம் காட்டி ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா எந்த பக்கமும் நிற்காத மறுத்தபோதும் எந்த வல்லரசு நாடும் இந்தியாவுக்கு எதிராக நிற்கவில்லை, நிற்கவும் முடியாது. நாமும் இந்தியாவும் இணைந்து நமது சுதந்திரத்தைப் பெற்றோம். ஆனால் மேற்கத்திய நாடுகளால் பாகிஸ்தான் ஒரு டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.
மேலும், தனது ஆட்சி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு அமெரிக்க வல்லரசை காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டிய இம்ரான் கான், தான் ரஷ்யாவுக்கு சென்றதன் பின்னணியிலேயே அனைத்து சம்பவங்களும் மாறி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT