Published : 06 Apr 2022 09:56 AM
Last Updated : 06 Apr 2022 09:56 AM
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடரும் நிலையில் ஐ.நா. பாதுகாபு கவுன்சில் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பேசிய அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை கலைத்துவிடுங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம்கடந்த 42 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்கள் உருக்குலைந்துள்ளன. கீவ் நகருக்கு அருகிலுள்ள இர்பின், புச்சா நகரங்களில் குவியல், குவியலாய் மனித உடல்கள் சாலைகளில் கிடக்கின்றன.
இந்நிலையில் ஐ.நா. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், "உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் உலகம் முழுவதும் 74 நாடுகளில் 1.2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, எரிபொருள், உர விலை உயர்வு ஆகியனவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். வழக்கம் போல் மிலிட்டரி பச்சை நிற டிஷர்ட்டில் தாடியுடன் தோன்றிய ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டின் புச்சா, இர்ஃபின் நகரங்களில் கிடந்த பிணக் குவியல் காட்சிகளை திரையில் காட்டி பேசத் தொடங்கினார். "உக்ரைன் மக்கள் குடியிருப்புகளில், வீடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய வீரர்கள் பொழுதுபோக்குக்காக எங்கள் மக்களைக் கொன்றுள்ளனர். கழுத்தறுத்து, நெற்றியில் சுட்டு கொலை செய்துள்ளனர். சிலரின் அங்கங்களை துண்டித்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். இத்தனையையும் செய்வது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடு. அந்த நாடு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனை தீர்மானங்களையும் தோற்கடிக்கிறது. இந்நிலையில், ஐ.நா.வுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களால் உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலையே கலைத்துவிடுங்கள்" என்று காட்டமாக தனது உரையை முன்வைத்தார்.
இதற்கு நேரடியாக அவையில் பதிலளித்த ரஷ்ய தூதர் வாஸிலி நெபன்சியா, உங்கள் மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்கள், உக்ரைனில் ரஷ்யா அடாவடிகளை செய்ததா என்று. சாட்சியங்களைக் கொடுங்கள் என்று கூறினார்.
இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, " உக்ரைனின் புச்சா நகரில் நடந்த படுகொலைகளை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகளல் மட்டுமே தீர்வை எட்ட முடியும்" என்றார். ஆனால், ரஷ்யாவை கண்டிப்பதாக அவர் ஏதும் சொல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT