Published : 05 Apr 2022 09:42 PM
Last Updated : 05 Apr 2022 09:42 PM
கீவ்: குழந்தைகளின் முதுகிலும், உடம்பிலும் தங்களது குடும்ப விவரங்களை உக்ரைன் நாட்டு மக்கள் எழுதி வருகின்றனர். ஒருவேளை ரஷ்யாவின் தாக்குதலில் பெற்றோர் இறந்தால் இந்த விவரங்களைக் கொண்டு அவர்களை அடையாளம் காண உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம்கடந்த 41 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தலைநகர் கீவ், கார்கிவ்போன்ற நகரங்கள் உருக்குலைந்துள்ளன. கீவ் நகருக்கு அருகிலுள்ள இர்பின், புச்சா நகரங்களில் குவியல், குவியலாய் மனித உடல்கள் சாலைகளில் கிடக்கின்றன.
இந்நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் உடல்களிலும், குழந்தைகளின் முதுகிலும் தங்களது குடும்ப விவரங்கள், தொலைபேசி எண்களை எழுதி வைப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் தாக்குதலில் தாங்கள் இறந்தாலோ அல்லது குழந்தைகள் அனாதையாக விடப்பட்டாலோ அந்த விவரங்களைக் கொண்டு சிறுவர்களை அடையாளம் காண முடியும் என்று நம்புகின்றனர்.
பெரும்பாலும் குழந்தைகளின் முதுகில் இந்த விவரங்கள் எழுதப்படுவது தெரியவந்துள்ளது. ஒரு குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள் எழுதப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர் அனஸ்தாஷியா லபாடினா தனதுட்விட்டர் பக்கத்தில், “குழந்தைகளின் உடலிலும் முதுகிலும் தகவல்களையும், செல்போன் நம்பர்களையும் அவர்கள் எழுதி வருகின்றனர்" என பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வைரா என்ற சிறுமியின் முதுகில் அவரின் பிறந்த தேதி எழுதப்பட்டுள்ளது, இதோடு சில எண்களும் எழுதப்பட்டுள்ளன.
வைராவின் தாய் சாஷா மகோவ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, "உக்ரைனில் நடக்கும் போரில் எங்களுக்கு எதாவது நேர்ந்தால், என் மகளை யாராவது காப்பாற்ற இப்படி எழுதியுள்ளோம்" என்றார்.
அதேபோல வைரா பற்றிய தகவல்கள் அடங்கிய அட்டை அவரது உடையில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருவது நெஞ்சத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.
அதேபோல் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகள் டி-ஷர்ட்டில் எழுதப்பட்ட எண்களுடன் ஒரு படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறும்போது, “எனது 5 வயது மகள் இந்த டி-ஷர்ட்டை அணிந்திருக்க, ஐரோப்பா ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் பணத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது” என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் ஒரு போர்க் குற்றவாளி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT