Published : 05 Apr 2022 03:48 PM
Last Updated : 05 Apr 2022 03:48 PM
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது ஏஜமானர் அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் உக்ரைன் தெருக்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட உடல்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்ட தன் எஜமானர் உடலின் அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் 1930 -ல் ஐப்பானில் உயிரிழந்த தனது ஏஜமானருக்காக 9 ஆண்டுகள் காத்திருந்து உயிரிழந்த ஹசிகோ நாயை நினைவுப்படுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் போர் காரணமாக ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன்அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் உக்ரைன் போரில் சுமார் 355 நாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT