Published : 04 Apr 2022 04:03 PM
Last Updated : 04 Apr 2022 04:03 PM
இஸ்தான்புல்: துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆண்டு பணவீக்க விகிதம் 61.14 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை, பாகிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் பட்டியலில் துருக்கியும் உள்ளது. அங்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பாகவே அங்கு பொருளாதார பாதிப்பு தொடங்கி விட்டது.
விநியோகச் சங்கிலித் தடை, துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பில் கடும் சரிவு, அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பின்னர் கரோனா ஏற்பட்ட பிறகு பெரும் பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. தொழில், வர்த்தகம் சரிவடைந்தது.
பணவீக்கம் உயர்ந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியை முன் வைத்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கையை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். செப்டம்பரில் மத்திய வங்கி 500 அடிப்படை புள்ளிகளை தளர்த்தி வட்டி விகிதங்களை குறைத்தது. இதனால் லிரா பலவீனமடைந்ததால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் மோதலால் துருக்கியில் கடுமையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விலையும் உயர்ந்துள்ளது. துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பும் கடும் சரிவு கண்டு வருகிறது.
இந்தநிலையில் துருக்கி நாட்டின் வருடாந்திர பணவீக்க விகிதம் வெளியாகியுள்ளது. துருக்கியின் வருடாந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக 61.14% ஆக உயர்ந்தது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலைகள் 5.46 சதவீதம் அதிகரித்துள்ளதாக துருக்கிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ஆண்டு பணவீக்கம் 54.44 சதவீதமாக உள்ளது.
நுகர்வோர் விலை பணவீக்கத்தில் மாதாந்திர உயர்வு போக்குவரத்து, பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. கல்வி தொடர்பான பொருட்களான பாடப்புத்தகங்கள் மற்றும் பள்ளி கட்டணம் ஆகியவை முறையே 13.29% மற்றும் 6.55% உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும், போக்குவரத்து செலவு 99.12% உயர்ந்துள்ளது. உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 70.33% ஆகவும், மரச்சாமான்களின் விலை 69.26% ஆகவும் உயர்ந்துள்ளது.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு மக்கள் அடிப்படைத் தேவையான உணவு பொருட்களைக் கூட வாங்க முடியாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT