Published : 04 Apr 2022 07:10 AM
Last Updated : 04 Apr 2022 07:10 AM
கீவ்: தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ரஷ்யாவின் திட்டமிட்ட படுகொலை என்றும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். அப்போது அங்குள்ள தெருக்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
புச்சா நகரிலுள்ள ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று புச்சா மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “புச்சா பகுதியில் 300 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு உள்ளனர். நகர தெருக்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சாலைகளில் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. குவியல் குவியலாய் சடலங்கள் கிடந்தன. இதனால் ஒரே இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி உடல்களை புதைத்தோம்" என்றார். இவர்கள் ரஷ்ய படையால் கொல்லப்பட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி யுள்ளது. மேலும் இர்பின் பகுதியில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் கூறும்போது, “இது ரஷ்ய ராணுவத்தின் திட்டமிட்ட படுகொலையாகும். கீவ் அருகேயுள்ள புச்சா நகரில் ஒரே இடத்தில் 300 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு திட்டமிட்டு படுகொலையை அரங்கேற்றியுள்ளனர். எவ்வளவு உக்ரைன் மக்களை வெளியேற்ற முடியுமோ அவ்வளவு மக்களை இங்கிருந்து வெளியேற்றுவதுதான் ரஷ்யாவின் திட்டம். இதை நாம் தடுத்து நிறுத்தி அவர்களை வெளியேற்ற வேண்டும். ஜி-7 நாடுகள் ரஷ்யா மீது தடை விதிக்க வேண்டும்” என்றார்.
உக்ரைன் அதிபருக்கான ஆலோசகர் மைக்கேலோ போடோலியாக் கூறும்போது, "கீவ் நகரம் 21-ம் நூற்றாண்டின் நரகமாக மாறி உள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண்களும், பெண்களும் கொல்லப்பட்டு சாலைகளில் வீசப்பட்டுள்ளனர். நாஜிக்களின் கொடூரக் குற்றங்கள் தற்போது ஐரோப்பிய யூனியனுக்கு திரும்பியுள்ளன" என்றார்.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ்கூறும்போது, “உக்ரைனின் இர்பின்,புச்சா நகரங்கள் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. பொதுமக்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களை போர்க்குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT