Published : 03 Apr 2022 04:42 PM
Last Updated : 03 Apr 2022 04:42 PM

‘‘முற்றிலும் பயனற்றது’’-  சமூக ஊடகங்களை தடை செய்யும் இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் எதிர்ப்பு

நமல் ராஜபக்சே: கோப்பு படம்

கொழும்பு: இலங்கையில் சமூக ஊடகங்களை தடை செய்யும் அந்நாட்டு அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நமல் ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரைமின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டங்களை கடுமையாக ஒடுக்க அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யாரையும் புகாரின்றி கைது செய்யவும், தடுப்புக்காவலில் வைக்கவும் முடியும். மேலும் நாளை காலை வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கும் மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும் சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது. இதனால் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களை இலங்கை அரசு முடக்கியது.

இந்நிலையில் இலங்கை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நமல் ராஜபக்ச, சமூக ஊடகங்களில் தடைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ‘‘சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே விபிஎன் நெட்வொர்க் கிடைக்கும் தன்மையும் உள்ளது. இதுபோன்ற தடைகள் முற்றிலும் பயனற்றவை. அதிகாரிகள் இன்னும் முற்போக்கான முறையில் சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x