Published : 02 Apr 2022 08:04 PM
Last Updated : 02 Apr 2022 08:04 PM

இந்தியா உடனான பிரச்சினைகளுக்கு அமைதிப் பேச்சு மூலமே தீர்வு: பாகிஸ்தான் ராணுவ தளபதி

பாகிஸ்தான் ராணுவத் தளபதி | கோப்புப் படம்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினை உள்பட இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற 'இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடல் 2022'- ல் இன்று பேசிய பாகிஸ்தான் ராவணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா கூறியது: "வளைகுடா பிராந்தியம் உள்ளிட்ட உலகின் மூன்றில் ஒரு பகுதிகளில் ஏதோ ஒரு பிரச்சினை அல்லது போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் உக்கிரம் நமது பிராந்தியதை தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.

காஷ்மீர் பிரச்சினை உள்பட இந்தியாவுடன் நிலுவையில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம்தான் தீர்க்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது. இதற்கு இந்தியா உடன்படும் பட்சத்தில் அடுத்த கட்ட நகர்வுக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.

இந்தியா,பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இந்த பிராந்தியத்தின் அரசியல் தலைவர்கள் தங்களுடைய உணர்வுகள், கருத்து வேறுபாடு மற்றும் வரலாற்றின் தடைகளை உடைத்து எறிந்து விட்டு, பிராந்தியத்தில் வசிக்கும் சுமார் மூன்று பில்லியன் மக்களும் ஒற்றுமை, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதற்கான சரியான நேரம் இது என நான் நம்புகிறேன்.

பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளுக்கு இந்தியா தங்களது ஆயுதங்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை வழங்கும் என்று நம்புகிறோம். ஏனெனில் உலக வரலாற்றில், அணு ஆயுத பலம் உள்ள ஒரு நாட்டின் சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஒன்று அடுத்த நாட்டின் எல்லைக்குள் தவறுதலாக விழுவது இதற்கு முன்பு நடந்ததில்லை.

அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது. நாங்கள் மற்ற நாடுகளுடனான எங்கள் உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், இருநாட்டு உறவுகளை விரிவுபடுத்த விரும்புகிறோம். பாகிஸ்தான் குழு அரசியலில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை" என்று அவர் பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கூட்டணி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தான் நிலவி வரும் கொந்தளிப்பான அரசியல் சூழல்நிலையில் ராணுவத் தளபதி இவ்வாறு பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x