Published : 31 Mar 2022 09:56 AM
Last Updated : 31 Mar 2022 09:56 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் வாவ்டா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதே இம்ரான் கான் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் மூத்த தலைவரான ஃபைசல், பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவரை படுகொலை செய்ய சதிகள் நடக்கின்றன. அதனால் பொதுக்கூட்டங்களில் பேசும்போது அவர் புல்லட் ப்ரூஃப் உடை அணிந்து கொள்ள உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் பிரதமரோ அல்லா என்னை அழைக்கும்வரை நான் உலகில் இருப்பேன் என்று கூறியுள்ளார் என்றார்.
என்ன நடக்கிறது பாகிஸ்தானில்..? கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.
இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதுகடந்த 28-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்தன. இதன் மீது வரும் ஏப்ரல் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இம்ரான் கான் தனது கட்சி எம்.பி.க் களுக்கு நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதத்தில், “நாடாளுமன்றத்தில் அரசு மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் நாளில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.
கைவிட்ட கூட்டணி.. இம்ரான் அரசுக்கு ஆதரவளித்து வந்த முத்தாஹிதா குவாமி முவ்மென்ட்-பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி) கட்சியின் 2 அமைச்சர்கள் நேற்று பதவி விலகினர். எம்க்யூஎம்-பி கட்சி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடைசிப் பந்துவரை விளையாடுவார்.. பாகிஸ்தான் அமைச்சரவையின் அவசரகூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இம்ரான் கான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார் என்றும், பதவிவிலகலாம் என்றும் தகவல் வெளியானது. ஆனால், அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அதேநேரம், பிடிஐ கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலம் இர்ஷத் ஷேக் கூறும்போது, “இம்ரான் கான் பதவி விலக மாட்டார். அவர் கடைசி பந்து வரை விளையாடுவார்” என்றார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில் 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியம். ஆனால்ஆளும் கூட்டணியின் பலம் இப்போது 165 ஆக குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT