Published : 30 Mar 2022 08:31 AM
Last Updated : 30 Mar 2022 08:31 AM

துருக்கி பேச்சுவார்த்தையில் உடன்பாடு: உக்ரைனில் படையை குறைக்கிறது ரஷ்யா

உக்ரைனின் மைகோலிவ் நகரில் பிராந்திய அரசு தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் தலைமை அலுவலகம் கடுமையாக சேதமடைந்தது. படம்: பிடிஐ

இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படை

களை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் 24-ம் தேதிஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைதொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 34-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய ராணுவ தாக்குதலில் உக்ரைனில் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அந்த நாட்டின் தலைநகர் கீவை இதுவரை கைப்பற்ற முடியவில்லை.

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா, உக்ரைன் இடையே பல சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடந்த பிப்ரவரி 28, மார்ச் 3, மார்ச் 7 ஆகிய தேதிகளில் ரஷ்யாவின் நட்பு நாடானபெலாரஸில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. உக்ரைன் போர் விவகாரத்தில் துருக்கி நடுநிலை வகித்து வருகிறது. நேட்டோவில் அங்கம் வகிக்கும் அந்த நாடு, ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. துருக்கி அதிபர் எர்டோகன் அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதன் விளைவாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினார். ரஷ்ய தரப்பில் விளாடிமிர் மெடின்ஸ்கை, உக்ரைன்தரப்பில் டேவிட் ஆகியோர் தலைமையேற்று 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது.

நேட்டோவில் இணைய மாட்டோம். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவோம் என்று உக்ரைன் தெரிவித்தது. இதை ரஷ்யதரப்பு ஏற்றுக் கொண்டது. மேலும்உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படைகளை குறைக்கவும் ரஷ்யா ஒப்புக் கொண்டது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷ்ய பிரதிநிதி விளாடிமிர் மெடின்ஸ்கை கூறும்போது, "அடுத்த கட்டமாக ரஷ்ய, உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசுவார்கள். இதில் முக்கிய உடன்படிக்கை கையெழுத்தாகும். அதன்பிறகு இரு நாடுகளின் அதிபர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது" என்றார்.

உக்ரைன் பிரதிநிதி டேவிட் கூறும்போது, "ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனின் அமைதிக்கு துருக்கி உட்பட8 நாடுகள் வாக்குறுதி அளிக்க கோரியுள்ளோம்" என்றார்.

துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லட் கூறும்போது, "ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைனில் சண்டைநிறுத்தம் அமலுக்கு வர வேண்டும்என்று துருக்கி விரும்புகிறது. விரைவில் அங்கு அமைதி திரும்பும். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் சுமுகதீர்வு காணப்படும்" என்றார்.

உக்ரைன் போரில் இதுவரை1,151 பொதுமக்கள் உயிரிழந்துள்ள னர். 1,842 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதைவிட உயிரிழப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்றுபோரில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. சுமார் 40 லட்சம் உக்ரைன் மக்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் தவிரலட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x