Published : 27 Mar 2022 05:52 PM
Last Updated : 27 Mar 2022 05:52 PM

'ரஷ்யா மீது உக்ரைனியர்கள் ஆழமான வெறுப்பு கொள்ளச் செய்கிறீர்கள்' - புதின் மீது அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒரு மாதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், நேற்றிரவு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மாஸ்கோவின் கொள்கைகளை வெகுக் கடுமையாக சாடியுள்ளார். அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி, "எங்கள் மக்கள் ரஷ்யாவை வெறுக்கக் கூடிய அத்தனை செயல்களையும் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி எம்மக்கள் அவர்களாகவே ரஷ்ய மொழியைப் புறக்கணிப்பார்கள். இதற்கு நீங்கள் நிகழ்த்தும் வெடிகுண்டு தாக்குதலும், அரங்கேற்றும் படுகொலைகளும், குற்றங்களும் தான் காரணமாக இருக்க முடியும்.

இடைவெளியே இல்லாமல் நீங்கள் பொழியும் குண்டு மழையால் எங்கள் நாட்டின் நகரங்கள் தரைமட்டமாகின்றன. மக்கள் அனைவரும் தஞ்சம்புக இடம் தேடி அலைகின்றனர். உணவும் தண்ணீரும் இன்றி தவிக்கின்றனர்" என்று பேசியுள்ளார்.

சனிக்கிழமை பின்னிரவு இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இருப்பினும், போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜபோரிஜியா மாகாணத்தில் ரஷயப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பொல்டாவ்கா, மாலினிவ்கா ஆகிய இரண்டு இடங்களையும் உக்ரைனியப் படைகள் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த இரு இடங்களிலும் கடுமையான சண்டை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீதான ரஷ்யப் போர் நீண்ட நாள் நீடிக்கும் என்பதால் மேற்கிலிருந்து இன்னும் ஆயுத உதவியை எதிர்பார்ப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கசாப்புக்கடைக்காரர்... "புதின் ஒரு கசாப்புக்கடைக்காரர் போல் உயிர்களைக் கொல்கிறார். அவர் ஒரு போர்க் குற்றவாளி. உக்ரைன் மோதலில் ரஷ்யா தோல்வியடைந்துவிட்டது என்றே நான் கூறுவேன். புதின் இனியும் ரஷ்ய அதிபராக நீடிக்க இயலாது. அதுபோல். நேட்டோ பிராந்தியத்தில் ஒரு அங்குலம் அளவு கூட அத்துமீறி நுழைய முடியும், தாக்க முடியும் என புதின் எண்ண வேண்டாம். புதினை மட்டும் தான் எதிர்க்கிறோம். சாமான்ய ரஷ்ய மக்களை அல்ல" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இனியும் புதின் ரஷ்ய அதிபராக நீடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆந்தணி பிளின்கன், ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த அமெரிக்கா எதுவும் செய்யவில்லை என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x