Published : 27 Mar 2022 03:36 PM
Last Updated : 27 Mar 2022 03:36 PM

புதிய சமூகவலைதளம் தொடங்குகிறாரா? - எலான் மஸ்க் ட்வீட் எழுப்பும் சந்தேகங்கள்

எலான் மஸ்க் | கோப்புப் படம்

உலகப் பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிதாக சமூகவலைதளத்தை தொடங்கவிருக்கிறாரோ என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது அவர் பதிவு செய்த ட்வீட்டும் அதற்கான பின்னூட்டங்களும் பதில்களும்.

முன்னதாக மார்ச் 25 ஆம் தேதி எலான் மஸ்க் ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில், "ஜனநாயகம் செயலாற்ற பேச்சு சுதந்திரம் தேவை. ட்விட்டர் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா" என வினவியிருந்தார். அதன் கீழ் ஆம், இல்லை ஆப்ஷன் இருந்தது. அந்த ஆப்ஷனில் இல்லை என்றே பெரும்பாலானோர் பதிவு செய்திருந்தனர். 70% வாக்குகள் இல்லை எனப் பதிவாகியிருந்தது.

மேலும், "இந்த வாக்களிப்பின் முடிவு மிகவும் முக்கியமானது. அதனால் கவனமாக வாக்களியுங்கள்" என்றும் அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய ட்விட்டராட்டி ஒருவர், "நீங்கள் புதிதாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்குவீர்களா? அதில் ஓபன் சோர்ஸ் அல்காரிதம் இருக்குமா? அதன் மூலம் கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? பிரச்சார நெடியில்லாத வலைதளமாக அது இருக்குமா? ஏனெனில் அப்படி ஒரு சமூகவலைதள பக்கம் வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த இளைஞரின் ட்வீட்டுக்குப் பதிலளித்த எலான் மஸ்க், இது குறித்து நான் தீவிரமாக பரிசீலித்து வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ட்விட்டரில் எப்போதும் விறுவிறுப்பாக இயங்கும் எலான் மஸ்க், சமீபகாலமாக ட்விட்டரின் கொள்கைகள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்கின் புதிய சமூகவலைதள யோசனையை ஆதரித்துள்ள அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின் முன்னாள் ஊழியர் பக் செக்டன், ட்விட்டரை வாங்கிவிடுங்கள் இல்லாவிட்டால் புதிதாக ஒன்றை உருவாக்குங்கள். சிலிகான் பள்ளத்தாக்கு சைக்கோக்களிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x