Published : 26 Mar 2022 01:50 PM
Last Updated : 26 Mar 2022 01:50 PM

சவுதி அரேபியாவுடனான உறவில் பிரச்சினைகளும் சவால்களும் உள்ளன. ஆனால்... - ஈரான் பதில்

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன்

டமாஸ்கஸ்: சவுதி அரேபியாவுடனான உறவில் நிறைய பிரச்சினைகளும், சவால்களும் உள்ளன. எனினும் சவுதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் அரசியல் ரீதியாக சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் நிகழ்வு ஒன்றில் சவுதியுடனான ஈரானின் உறவு எவ்வாறு உள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறும்போது, “சவுதி அரேபியாவின் நடவடிக்கைகளால் அந்நாட்டுடனான உறவில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. மினாவில் சுமார் 460 ஈரானியர்கள் உயிரிழந்ததை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். சவுதி அரேபியாவுடனான உறவில் நிறைய பிரச்சனைகளும், சவால்களும் இருந்து வருகின்றன. எனினும் சவுதியுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சவுதி அரேபியா ஷியா மதகுரு ஒருவரை தூக்கிலிட்டதைத் தொடர்ந்து ஈரானில் சவுதி தூதரக அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தன.

இந்த நிலையில், ஈரான் - சவுதி அரேபியா இடையே கடந்த ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது.

ஈரான் முன்னாள் அதிபர் ஹசன் ரவ்ஹானி ஆட்சியில் இருக்கும்போது சவுதியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தற்போது ஈரானி அதிபராக உள்ள இப்ராஹிம் ரைசி தொடர்கிறார்.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x