Published : 26 Mar 2022 09:56 AM
Last Updated : 26 Mar 2022 09:56 AM

நியூஸ் ப்ரின்ட் பற்றாக்குறையால் சனிக்கிழமை பிரதியை நிறுத்தியது இலங்கையின் பிரபல 'தி ஐலாண்ட்' பத்திரிகை

கொழும்பு: நியூஸ் ப்ரின்ட் பற்றாக்குறை இன்றைய (சனிக்கிழமை) எடிசனை நிறுத்தியுள்ளது இலங்கையின் பிரபலமான தி ஐலாண்ட் பத்திரிகை. நியூஸ் ப்ரின்ட் எனப்படும் செய்திகளை அச்சிடும் தாளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால் வார இறுதி எடிசனை நிறுத்துவதாக தி ஐலாண்ட் பத்திரிகை அறிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் இறுகிவருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் இரண்டு வேளை சாப்பாடு போதும் என்றளவுக்கு அங்குள்ள சாமான்ய மக்களின் நிலைமை மோசமடைந்துள்ளது. விரைவில் பசியும், பட்டினியும் ஏற்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையின் பிரபல பத்திரிகையான தி ஐலாண்ட், தனது வார இறுதி நாட்கள் எடிசனை நிறுத்தியுள்ளது. நியூஸ் ப்ரின்ட் எனப்படும் செய்திகளை அச்சிடும் தாளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால் வார இறுதி எடிசனை நிறுத்துவதாக தி ஐலாண்ட் பத்திரிகை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு நேற்றைய செய்தித்தாளிலேயே வெளியானது. அந்த அறிவிப்பில், சனிக்கிழமை எடிசனை நாங்கள் நிறுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்ற தகவலை வாசகர்களிடம் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிரோம். எங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட சில பிரச்சினைகளால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது கூட இந்த செய்தித்தாள் தடையின்றி அச்சானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அப்பத்திரிகையின் ஆசிரியர் பிரபாத் சபந்து தி இந்து ஆங்கில பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், "கடந்த சில காலமாகவே நிறைய பத்திரிகைகள் மூடப்படும் நிலையை நோக்கி நகர்கின்றன. நியூஸ் ப்ரின்ட் மட்டுமே பிரச்சினையில்லை. ப்ரின்டிங் ப்ளேட், மை ஆகியனவற்றையும் கூட நாங்கள் இறக்குமதி செய்கிறோம். இப்போது பொருளாதார நெருக்கடியால் எல்லாமே குறைவாகவே கிடைக்கிறது. செய்தித்தாளின் பக்கங்களைக் குறைத்துள்ளோம். இதனால் விளம்பர வருமானமும் இல்லை. 1981ல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஏப்ரல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மட்டுமே நாங்கள் பிரதியை அச்சிடாமல் விடுமுறை விட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் மொத்தமாகவே தாள் இல்லாமல் போய்விடும். அரசாங்க கோப்புகளை அச்சிடக் கூட தாள் இருக்காது" என்றார்.

இலங்கை தனக்கான நியூஸ் ப்ரின்ட்டை ஆஸ்திரேலியா, நார்வே, இந்தோனேசியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பண மதிப்பு சரிவால் இறக்குமதிகள் கேள்விக்குறியாகியுள்ளன.

வீரகேசரி என்ற தமிழ் பத்திரிகையை அச்சிட்டுவந்த எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன் கூறுகையில், "நாங்கள் 3 மாதங்களுக்கு முன்னாள் நியூஸ்ப்ரின்ட் ஆர்டர் செய்யும்போது அதன் விலை ஒரு டன் 750 டாலர் என்றளவில் இருந்தது. இப்போது 1070 டாலராக அதிகரித்துள்ளது. இந்த விலையில் வாங்கினால் உற்பத்திச் செலவில் 70% தாள் வாங்கும் நிமித்தமாகவே சென்றுவிடும். இதனால் இந்தியாவிலிருந்து தாள் வாங்குகிறோம். ஆனால் அதன் தரம் சரியில்லை" என்றார்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்.. முன்னதாக கடந்த வாரம் இலங்கையில் தாள் பற்றாக்குறையால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கானபருவத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320 ஆக உயர்ந்து விட்டது. கேஸ் சிலிண்டர் விலை 4190 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சமையல் எரிவாயுவுக்கு பெரும் பற்றாக்குறையும் நிலவுகிறது.

இதனால் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. பேக்கரி மற்றும் இனிப்பங்களில் திண்பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உளுந்தவடை ஒன்றின் விலை 80 ரூபாயாக விற்பனைய செய்யப்படுகிறது.

அரிசி விலை 100, சீரகம் ஒரு கிலோ சீரகம் 1899, பெரும் சீரகம் ரூ. 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36,கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பால் பவுடர் ரூ.1945-க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீ 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடைகளில் பால், டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x