Published : 25 Mar 2022 08:10 PM
Last Updated : 25 Mar 2022 08:10 PM
மரியுபோல்: உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் மக்கள் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்த நாடக அரங்கத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 300 பேர் இறந்திருக்கலாம் என நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் நடத்த தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டது. கடந்த சில நாட்களாக ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்து வரும் ரஷ்யா, அங்கு தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்த வாரத்தில் மரியுபோல் நகரத்தில் உள்ள நாடக அரங்கம் ஒன்றின் மீது ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கின. அந்தத் தாக்குதலில் குறைந்தது 300 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்தல் நடந்தபோது, அந்த அரங்கத்தினுள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பேர் பதுங்கி இருந்தனர் என்று உக்ரைனின் அதிகாரிகள் சர்வதேச செய்தி நிறுவனமான ஏஎஃப்பியிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ரஷ்யா நடத்திய அந்தத் தாக்குதலில், நாடக அரங்கில் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்த சுமார் 300 பேர் இறந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளதாக சிட்டி ஹால் தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் தினமும் 50 முதல் 100 குண்டுகளை மரியுபோல் நகரின் மீது வீசுவதாகவும், இதனால் நகரின் 80 சவீத கட்டிடங்கள் மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு சேதமாகயுள்ளதாக நகர சபைத் தெரிவித்துள்ளது.
இந்த நகரினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யப் படைகள் நடத்தும் தீவிர தாக்குதலினால் சுமார் 3,00,000 மக்கள் வெளியேற முடியாமல் நகரத்திற்குள் சிக்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT