Published : 25 Mar 2022 05:56 PM
Last Updated : 25 Mar 2022 05:56 PM
மெல்போர்ன்: உலகின் மிகவும் நீளமான பவளப்பாறைத் திட்டான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்-ல் மீண்டும் பெரிய அளவில் வெளிர் தன்மை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் இருந்து 2,300 கிமீ தூரத்திற்கு நீண்டு இருக்கிறது கிரேட் பேரியர் பவளப்பாறைத் திட்டுகள். உலகின் பெரிய பவளப்பாறைத் திட்டான இது, மிகப் பெரிய பல்லுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
இந்தநிலையில், இந்தப் பவளப்பாறைத் திட்டுகளை கண்காணித்து வரும் கிரேட் பேரியர் பவளப்பாறை கடல் பூங்கா அதிகாரிகள் மேற்கொண்ட வான்வழி ஆய்வில் அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. ஆய்வின்போது பவளப்பாறை திட்டுகள் மிகப் பெரிய அளவில் வெளிர் தன்மை அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், இந்தப் பகுதியில் கடல்நீரின் வெப்பநிலை அதன் சராசரியை விட 4 செல்சியஸ் அதிகமாக இருக்கிறது என இந்த அமைப்பு எச்சரிக்கை செய்திருந்தது. கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து, பவளப்பாறைத் திட்டு இவ்வாறு வெளிர்தன்மை அடைவது இது நான்காவது முறையாகும்.
வெப்ப மாற்றம் காரணமாக அழுத்தம் அடையும் பவளப்பாறைகள் தங்களுக்குள் இருக்கும் ஆல்காவை வெளியேற்றும்போது அவை இவ்வாறு வெளிர் தன்மையை அடைகின்றன.
இந்த நிகழ்வு, ஆஸ்திரேலியாவில் லா நினா வானிலை நிலவும்போது நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக லா நினா வானிலை ஆஸ்திரேலியாவில் குளிர்ச்சியான வெப்பநிலையைக் கொண்டுவருகிறது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பு உயிர்வாழ வேண்டுமானால், காலநிலை மாற்றம் குறித்து அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு, யுனஸ்கோவின் ஆபத்தில் இருக்கும் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இருந்து கிரேட் பேரியர் பவளப்பாறையை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியிருந்தது. அதேபோல பவளப்பாறைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சரிசெய்ய இவை போதுமானது இல்லை என விமர்சனம் செய்யப்பட்டது.
மீண்டும் பெரிய அளவில் பவளப்பாறை வெளிர் தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது உண்மையில் இதயத்தை உடைக்கிறது. நம்பமுடியாத இயற்கை அதிசயத்தை விரும்பும் அனைவருக்கும் இது பெரிய அதிர்ச்சியாகும். இந்தப் பவளப்பாறைத் திட்டு, கடல்வாழ் உயிரினங்களின் தாயமகமாகும். இந்த தொடர்ச்சியான வெளிர் தன்மை நிகழ்வு சுற்றுலாத் துறையை கடுமையாக பாதித்துள்ளது என ஆஸ்திரேலியன் பாரம்பரிய அறக்கட்டளைத் தெரிவித்துள்ளது.
இந்த பவளப்பாறைத் திட்டுகளில் 1998-ம் ஆண்டு முதல் பெரிய வெளிர் தன்மை நிகழ்வு நடந்தது. அதனைத் தொடர்ந்து, 2002, 2016, 2017 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் மீண்டும் பவளப்பாறைகள் வெளிர் தன்மையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் படம் உறுதுணை: பிபிசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT