Published : 25 Mar 2022 09:58 AM
Last Updated : 25 Mar 2022 09:58 AM
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், பொதுமக்களைக் குறிவைத்து தாக்கும் ரஷ்யப் படைகள் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து சிதறும்போது பொதுமக்களின் உடல்கள் வெந்து புண் ஆவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். இச்சூழலில் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கும், ரசாயன மற்றும் அணு ஆயுத எதிர்ப்பை வலுப்படுத்துமாறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா அடுத்ததாக இன்னும் பல ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருவதால், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் தங்களுக்கு ஆயுதங்களுடன், டேங்குகளும், போர் விமானங்களும் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்ன செய்யும் பாஸ்பரஸ் குண்டு: பாஸ்பரஸ் குண்டு என்பது வென் பாஸ்பரஸால் ஆனது. இவை பூண்டின் வாசனையைப் பரப்பும். வெடித்துச் சிதறும் போது மிக அடர்த்தியான வெண் புகை மண்டலத்தை உருவாக்கும். இதனால் தாக்குதல் நடத்தும் படைகளுக்கு தற்காப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வகை குண்டுகளை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தத் தடை இருந்தாலும் கூட இதை ஆள்நடமாட்டம் இல்லாத ஓபன் ஸ்பேஸ் வகையறா பகுதிகளில் பயன்படுத்த ஐ.நா. அனுமதிக்கிறது. இந்த குண்டு மக்கள் மீது விழுந்தால் தோலில் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தப் புகையை சுவாசிப்பதால் புற்றுநோய் குறிப்பாக ரத்தப் புற்றுநோய் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வகை குண்டுகளை 2004ல் இராக் போரில் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. 2006ல் இஸ்ரேல், பாஸ்பரஸ் குண்டுகளை லெபனானுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது. அதேபோல் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் காசா போரின் போது இஸ்ரேல் இந்த வகை குண்டுகளை மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பயன்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கூட இவ்வகை குண்டுகளை ஒருமுறை பயன்படுத்தியுள்ளனர். சிரிய போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
பைடனின் பயணம்: இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உக்ரைன் போலந்து எல்லையில் உள்ள சிறிய நகருக்குச் செல்கிறார். ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமையைத் தெரிவிக்கவே பைடன் அங்கு செல்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், நேட்டோ மிக அதிகமாக வலுவடைந்துள்ளதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. வலியுறுத்தல்: உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 140 நாடுகள் போருக்கு எதிராகவும், 5 நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. 38 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
போலந்துக்கு கண்டிப்பு: உக்ரைனுக்கு அண்டை நாடான போலந்து நிறைய உதவிகளை செய்து வருகிறது. உக்ரைனிலிருந்து வெளியேற உக்ரைனியர்கள் பெரும்பாலானோர் போலந்தில் தான் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் போலந்து தனது நாட்டிலிருந்து 45 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளது. அவர்கள் அனைவரும் உளவு பார்ப்பதில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றியுள்ளது. போலந்தின் இந்த நடவடிக்கை மாஸ்கோவிடனான மோதலை அதிகரிக்கும் செயல் என நேட்டோ கண்டித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT