Published : 24 Mar 2022 10:23 PM
Last Updated : 24 Mar 2022 10:23 PM

ரஷ்யா - உக்ரைன் போர் | நேட்டோவிடம் கூடுதல் ஆயுதங்கள் கேட்கும் ஜெலன்ஸ்கி

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவிடம் அதிகமான ஆயுதங்கள் வேண்டும் என்று கேட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவின் மீது புதிய பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் பிப்ரவரி 24ம் தேதி முதல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இன்றுடன்(வியாழக்கிழமை) ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து சமாளிக்க உக்ரைன் அதிபர் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளிடம் ராணுவ, பொருளாதார உதவிகளை கேட்டு வருகிறார்.

இன்று அவசர நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலமாக உரையாற்றினார். அப்போது அவர், "உக்ரைனுக்கு வரம்புகளற்ற ராணுவ உதவியை தாருங்கள். விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களையும் தந்து உதவுங்கள். அது போன்ற ஆயுதங்கள் இல்லாமல், இந்தமாதிரியான போர்களில் நீடித்து நிற்க முடியுமா. எங்களுடைய பொதுவான மதிப்புகளுக்காக போராடி வரும் நாங்கள் ரஷ்யாவிற்கும், மேற்குலக நாடுகளுக்கும் இடையில், இருண்ட பக்கத்தில் நிற்பதாக உணருகிறோம்" என்று கூறினார்.

முன்னதாக, உக்ரைன் ஐரோப்பாவின் முழுமையான பாதுகாப்பிற்காக போராடி வருகிறது. உக்ரைன் ஐரோப்பாவின் முழுமையான அங்கமாக இருக்க விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொர்பாக ரஷ்யாவுக்கு பொருளாதாரரீதியாக மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, டஜன் கணக்கான ரஷ்ய பாதுகாப்பு நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய வங்கியின் தலைமை நிர்வாகி ஆகியோரைக் குறிவைத்து இந்த பொருளாதரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு ரஷ்யா அதன் தங்க இருப்புகளை பயன்படுத்துவதை மேற்கத்திய நாடுகள் பரீசிலிக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்திருந்தார்.

நேட்டோ அவசர உச்சிமாநாட்டிற்கு முன்பாக பேசியிருந்த இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலமாக புதின் எல்லையை மீறிவிட்டார். நாங்கள் அவரை பொருளாதார ரீதியாக மேலும் அவரைக் கட்டுப்படுத்த வேண்டும். புதின் தனது தங்க இருப்புகளை பயன்படுத்துவதை தடுக்க என்ன செய்யமுடியும் எனப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

உக்ரைனில் நிலவி வரும் நிலைமை குறித்து விவாதிக்க நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் அவசர கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்று வியாழக்கிழமை பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவில் புதிய போர்க் குழுக்களை உருவாக்குவதாக நேட்டோ அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x