Published : 23 Mar 2022 05:22 PM
Last Updated : 23 Mar 2022 05:22 PM
காபூல்: ஆப்கானிஸ்தானில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறப்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் பெண்கள் பள்ளிகளை மூடுவதற்கு ஆளும் தலிபான் அரசு உத்தரவிட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்களின் ஆட்சி: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர், அப்போதைய அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சி கலைக்கப்பட்டு, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு ஏழு மாதங்களாக தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்னர் முதல் முறையாக ஆப்கனில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் தலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மூடப்படும் என்று அறிவித்தது.
இதுகுறித்து ஆப்கன் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இஸ்லாமியச் சட்டம் மற்றும் ஆப்கானிய கலாசாரத்தின்படி ஒரு நல்லத் திட்டம் உருவாக்கப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும். அனைத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகள் படிக்கும் பள்ளிகள் அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை விடப்படுவதாக நாங்கள் அறிவிக்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை தலிபான்களின் செய்தித் தொடப்பாளர் இனாமுல்லா சமங்கனி உறுதிப்படுத்தினார். ஆனால், அதற்கான காரணத்தை அவர் விளக்க வில்லை. "இது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று ஆப்கன் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஜிஸ் அஹ்மதி ராயான் கூறியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை: மேற்குல நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வந்த அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சி சரிந்து, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர், இதில் பலர் ஆசிரியர்கள்.
"நாங்கள் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளோம். எங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தேவை. இந்த பிரச்சினையை சமாளிக்க தற்காலிக அடிப்படையில் புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த முயற்சிக்கிறோம்" என அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவிகள் வேதனை: கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று (செவ்வாய் கிழமை) மாலையில் மாணவர்கள் மீண்டும் வகுப்பு திரும்புவதற்கு வாழ்த்துத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது பாதியிலேயே மாணவிகள் வகுப்பிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
"என்னுடைய மாணவிகள் அழுதபடியே வகுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் அழுவதைப் பார்ப்பது அத்தனை வேதனையாக இருந்தது" என்று ஒமர் கான் பெண்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
"இது எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இந்தச் செய்தியை எங்கள் பள்ளி முதல்வர் அழுதபடியே எங்களிடம் கூறியபோது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம்" என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத மாணவி ஒருவர் தெரிவித்தார்.
பெண்களுக்கான கல்வி: கடந்த 1996 - 2001 ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்கள் கல்வியையும், பெரும்பாலான பெண் வேலை வாய்ப்புகளையும் தடை செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தது. தலிபான்களின் எதிர்காலத் திட்டங்களுக்கு சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளிப்பதற்கு அந்நாட்டின் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இரண்டு மாதங்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. 12 முதல் 19 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான பள்ளிகள் தனித்தனியாக இருப்பதையும், இஸ்லாமியக் கொள்கைகளின் படி அவை செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலிபான்கள் வலியுறுத்தியிருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பல அரசு வேலைகளிலிருந்து அவர்கள் திறம்பட வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பெண்களின் ஆடை விஷயத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தலிபான்கள், பெண்கள் தனியாக நகரங்களுக்கு வெளியே பயணம் செய்வதை தடைசெய்திருக்கிறார்கள்.
தாலிபான்கள் தங்களின் கொள்கையில் இருந்து பின்வாங்காத பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் கல்விக்கு மீண்டும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT