Published : 20 Mar 2022 06:33 AM
Last Updated : 20 Mar 2022 06:33 AM
அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மைகோலிவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 40 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே நேற்று 24-வது நாளாக போர் நீடித்தது. இந்த போரில் ரஷ்ய ராணுவம் முதல்முறையாக கின்சல் என்ற அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த ஏவுகணை மேற்பரப்பில் மட்டுமன்றி பூமிக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகள் வரை தகர்க்கும் திறன் கொண்டது.
உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாடின் நகரில் ஆயுதக் கிடங்கு உள்ளது. அங்கு பூமிக்கு அடியில் பதுங்கு குழிகளில் ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆயுதக் கிடங்கை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று கின்சல் ஹைப்பர்சானிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் ஆயுத கிடங்கு முழுமையாக தகர்க்கப்பட்டது. அமெரிக்கா வழங்கிய அதிநவீன ஆயுதங்கள் அந்த ஆயுதக் கிடங்கில் இருந்த தாக கூறப்படுகிறது.
40 வீரர்கள் உயிரிழப்பு
தலைநகர் கீவ், கார்கிவ், மேரிபோல் உள்ளிட்ட நகரங்கள் மீதும் ரஷ்ய ராணுவம் நேற்று தீவிர தாக்குதல்களை நடத்தியது. மைகோலிவ் நகரில் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர்.
உக்ரைன் அதிபர் ஜெலன்கி கூறும்போது, ‘‘உக்ரைனின் இறையாண்மை, நீதி பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்ட பல தலைமுறைகள் ஆகும்’’ என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசினார். அப்போது உக்ரைனின் மேரிபோல் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பிரான்ஸ் அதிபர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அதிபர்புதின், பொதுமக்கள் உயிரிழப்பை முடிந்தவரை தவிர்த்து வருகிறோம். ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறோம்’’ என்றார்.
கின்சல் ஏவுகணையின் சிறப்பம்சங்கள்
ரஷ்யாவின் அதிநவீன ஹைப்பர்சானிக் கின்சல் ஏவுகணை 1,500 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை பாயும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் 480 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்ல முடியும். அணுஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது.
கடந்த 2016-ல் சிரியா உள்நாட்டுப் போரில் அந்த நாட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா போரில் ஈடுபட்டது. அப்போது ரஷ்ய ராணுவம் கின்சல் ஏவுகணைகளை முதல்முறையாக பயன்படுத்தியது. தற்போது உக்ரைன் போரில் அதே ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஏவுகணை தடுப்பு சாதனங்களால், கின்சல் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT