Published : 20 Apr 2016 01:17 PM
Last Updated : 20 Apr 2016 01:17 PM
"இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்" என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை தெரிவித்திருக்கிறது.
"கியூபாவின் மூத்த தலைவர்கள் மறைந்தாலும்கூட அந்நாட்டின் புரட்சிகர சிந்தனை தலைமுறைகள் கடந்து நிற்கும்" என்பதே அச்செய்தி.
நேற்று செவ்வாய்க்கிழமை கியூப காங்கிரஸ் கூடி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பை 84 வயதான ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைப்பது என்ற முடிவை எடுத்தது.
முக்கிய முடிவு எட்டப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் கியூப அரசு தொலைக்காட்சியில் தோன்றினார் ஃபிடெல் காஸ்ட்ரோ.
தலைநகர் ஹவானாவில் உள்ள பாரம்பரிய அரங்கில் ஃபிடெல் காஸ்ட்ரோ உரையாற்றினார். அவர் பேச்சை கேட்க குழுமியிருந்த விருந்தினர்கள் சிலர் காஸ்ட்ரோவின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கண்ணீர் சிந்தினர்.
அவர் பேசியதாவது:
இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். அதன்பின்னர் நானும் மற்ற வயோதிகர்களைப் போலவே இருப்பேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்த புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்.
கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்குண்டான உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாச்சார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும்.
இவ்வாறு காஸ்ட்ரோ பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT