Published : 18 Mar 2022 06:30 AM
Last Updated : 18 Mar 2022 06:30 AM
வாஷிங்டன்: அணுக் கதிர்வீச்சு அச்சத்தால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம்தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனில் 4 அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 15 அணு உலைகள் உள்ளன. ரஷ்ய ராணுவ தாக்குதலில் அணுமின் நிலையங்கள் சேதமடைந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் அணுகதிர் வீச்சு அபாயம் ஏற்படும்.
உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளோ, ஐரோப்பிய நாடுகளோ போரில் பங்கேற்றால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் அணு ஆயுத படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
அணுக் கதிர்வீச்சு, அணுஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மருத்துவத் துறை நிபுணர்கள் கூறியதாவது: அணுக் கதிர்வீச்சு ஏற்பட்டால் நுரையீரல், தைராய்டு சுரப்பி அணுக் கதிர்வீச்சை கிரகிக்கும். பொட்டாசியம் அயோடைடு மாத்திரையை உட்கொண்டால் இந்தஆபத்து தடுக்கப்படும். இதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளை பொதுமக்கள் வாங்கி குவித்து வருகின்றனர். தற்போது இந்த மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு 14 மாத்திரைகள் அடங்கிய பாக்கெட் ரூ.1,069-க்கு விற்கப்பட்டு வந்தது. தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒரு பாக்கெட் ரூ.10,159-க்கு விற்கப்படுகிறது. அவ்வளவு விலை கொடுத்தும் சந்தையில் மாத்திரைகள் கிடைக்கவில்லை. முன்னணி மருந்து நிறுவனங்கள் தங்களிடம் பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் இருப்பில் இல்லை என்று அறிவித்துள்ளன.
இந்த மாத்திரைகள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ஒரு மாத்திரை சாப்பிட்டால் 24 மணி நேரம் மட்டுமே பலன் அளிக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.அதிக மாத்திரைகளை உட்கொண்டால் உயிரிழப்பு, மோசமான பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT