Published : 17 Mar 2022 04:48 PM
Last Updated : 17 Mar 2022 04:48 PM
கொழும்பு: இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிகளால், பொதுமக்களும், எதிர்கட்சியினரும் அந்நாட்டு வீதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பொதுமக்கள் தன்னெழுச்சியாக சாலைகளில் குவிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது ஆளும் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சமீப காலமாக எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாட்டில் பலருக்கு அவை எட்டாக்கனியாக மறிவருகின்றன. நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலைமையை மாற்றக்கோரி, 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடற்கரையை நோக்கியபடியிருக்கும், கால்லி வீதியில், பிரதான எதிர்கட்சியான சமகி ஜனா பாலவேகியா கட்சித் தலைமையில் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் பேரணியின் கலந்துகொண்ட எதிர்கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களும் "ராஜபக்சேவே வீட்டுக்கு போ" என்றும், அரசாங்கத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஆந்திரமடைந்க ஒருவர் நீண்ட கம்பு ஒன்றில், இரண்டு ரொட்டித் துண்டுகளை குத்தியபடி கத்தும் படம் ஒன்று, மக்கள் அடிப்படை பொருட்களைக்கூட வாங்கமுடியாத அவல நிலையில் உள்ளனர் என்ற வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 265 ஆக குறைந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசா, "அதிபர் ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜபக்சே இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பத் தவறி விட்டனர். உங்களால் முடிவில்லை என்றால் எங்களிடம் நாட்டை ஒப்படையுங்கள் நாங்கள் கட்டி எழுப்புகிறோம். 2024ல் நடத்தவேண்டிய அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துங்கள்" என ஆளுங்கட்சிக்கு சவால் விட்டார். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பெருவாரியான மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "இரண்டு வருடங்களாக நீங்கள் கஷ்டப்பட்டு வீட்டீர்கள், இனியும் கஷ்டப்பட முடியுமா" என்று கேள்வி எழுப்பினார். கடந்த 2021-ம் ஆண்டும் எஸ்ஜெபி கட்சி இதேபோல ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
மக்கள் போராட்டம்: எதிர்கட்சிகள் உள்பட யார் மீதும் எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை எனக் கூறும் மக்கள், அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் விலகி தன்னிச்சையாக இந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபகாலம் வரையில் போராட்டம் எதிலும் கலந்துகொள்ளாத தனியார் துறை ஊழியரான அருணா வாங்கசூரியா, "அரசியல்வாதிகள் இந்த நாட்டை நாசமாக்க வேண்டாம்" என்ற பதாகை மற்றும் மெழுகுவர்த்தயுடன் கொழும்பில் உள்ள சந்தை பகுதியில் 200 பேருடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.
"இங்கு நிலவும் நெருக்கடிக்கு அரசிடம் தீர்வோ, அதைத் தடுக்கும் யுக்தியோ இல்லை என்பதை நினைத்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். இது நமது நாடு, நமது குழந்தைகள் இங்கே வளர்ந்து வாழ வேண்டும். நாம் எங்கே செல்லமுடியும் என்று அவர் ஆட்சியாளர்களுக்கு கேள்வி எழுப்பினார்.
தன் பெயரை வெளியிட விரும்பாத, நடைபாதையில் முக்காலியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 84 வயது பெண்மணி ஒருவர் "நான் மிகுந்த அவநம்பிக்கையில் இருக்கிறேன். செய்திதாளைப் படிக்கும்போது. தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போது மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏழை மக்கள் வீதிக்கு வருவதற்கு சில வாரங்களேயாகும்" என்றார்.
நீண்டகால மின்வெட்டு, மற்றும் தொர்ச்சியாக நிலவிவரும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியவை குறித்த அரசங்கத்திற்கு எதிரான தங்களின் அதிருப்தி, கோபம் மற்றும் ஏமாற்றத்தை பதிவு செய்ய பல்வேறு தரப்பிலிருந்தும் மக்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்பிஜி விநியோக மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி இலங்கையின் பொதுவான காட்சியாக மாறியுள்ளது. ஏழை மக்கள் செலவைக் குறைத்துக் கொள்வதற்காக குறைவான அளவு உணவையே உண்கின்றனர் என்ற செய்திகள் அதிகரித்து வருகின்றன.
ஹேஷ்டேக் யுத்தம்: ஆனால் ஆளும் அரசாங்கம், பெருகிவரும் மக்களின் ஆத்திரம் மற்றும் விமர்சனங்களால் கலக்கமடைந்தாக தெரியவில்லை. சமீபத்தில் இலங்கையில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கான '#GohomeGota" என்ற ஹேஷ்டேக்கிற்கு எதிர்வினையாக மூத்த அமைச்சர் ஒருவர், "#WearewithGota" என்ற ஹேஷ்டேக்கினை வெளியிட்டிருப்பது இதனை உணர்த்துகிறது.
இந்தநிலையில், இங்கிலாந்தும், கனடாவும் இலங்கைக்குச் செல்ல விரும்பும் தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கு, பொருளாதாரம் மோசமடைந்தும், அடிப்படை பொருட்கள் தட்டுப்பாடு உள்ள நாடு இலங்கை என்று பயண வழிகாட்டுதலில் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த எச்சரிக்கையை இலங்கை அரசு மறுத்துள்ளது. உலகளாவிய பெருந்தொற்றுக்குப் பின்னர் நாட்டின் சுற்றுலாத் துறை மெல்ல புத்தூயிர் பெற்று வரும் நிலையில், அதன் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வெநாட்டு பணம் அதிகம் தேவைப்படும் வேளையில், இந்த கூற்று நிலவும் பொருளாதார பாதிப்புகளை அதிகரிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- தகவல் உறுதுணை: மீரா ஸ்ரீனிவாசன்
தொடர்புடைய சிறப்புக் கட்டுரை > இருளுக்குள் சிக்கியிருக்கும் இலங்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT