Published : 16 Mar 2022 09:26 PM
Last Updated : 16 Mar 2022 09:26 PM
மரியுபோல்: காரும் பெட்ரோலும் இருந்தால் மட்டுமே மரியுபோல் நகரத்தில் இருந்து வெளியேற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதாக உக்ரைனில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 20 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் தாக்குதலின் ஆரம்பம் முதலே உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தை ரஷ்யா கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் தாக்கி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதலில் அந்நகரத்தில் 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனில் வசிக்கும் அன்னா ரோமானிகோ என்ற பெண் பேசிய ஆடியோ ஒன்றை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அன்னா ரோமானிகோ மரியுபோல் நகருக்கு வெளியே வசித்து வருகிறார். ஆனால், அவரின் பெற்றோர் மரியுபோல் நகரில் சிக்கியுள்ளனர்.
தற்போது மரியுபோல் நகரில் தொடச்சியாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த நகரின் அவல நிலையை அன்னா தனது ஆடியோவில் விவரிக்கிறார். அதில் அவர், "தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் மரியுபோல் நகரில் என்னுடைய பெற்றோர்கள் சிக்கியுள்ளனர். கடந்த 10 மணி நேரமாக ரஷ்யப் படைகள் அங்கு குண்டுவீசி வருகின்றன. அங்கு வீடுகளின் வெப்பநிலை 4, 5 டிகிரி செல்சியசாக உள்ளது. நகரில் தண்ணீர், உணவு, மின்சாரம் எதுவும் இல்லை. வீட்டினை சூடேற்றவும் வழியில்லை.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் வழியில்லாமல் என் பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்? கடைகள் நேற்று வரை மட்டுமே திறந்திருந்தன. நகரின் சில பகுதிகளில் மட்டுமே தொலைத்தொடர்பு வசதி உள்ளது. மரியுபோல்வாசிகள் வெளியுலகைத் தொடர்புகொள்ள முடியாத அபாயமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தொடர்ந்து குண்டுவீச்சு தக்குதல்களுக்கிடையில், தங்களுடைய சொந்த பாதுகாப்பில் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறி உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குச் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி வெளியேற உங்களிடம் காரும், அதில் பெட்ரோலும் இருக்க வேண்டும். போகும் வழியில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ள மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கார் இல்லாத மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
21-ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலையின் சாட்சியாகவும், பலியாகவும் நானே மாறுவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT