Published : 16 Mar 2022 05:45 PM
Last Updated : 16 Mar 2022 05:45 PM
புதுடெல்லி: சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி பேச்சுவார்த்தை நடத்த விரைவில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையே நிலவி வரும் எல்லை பிரச்சினை, ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் குறித்து விதாதம் நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி விரைவில் இந்தியப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா காங்கிரஸ் கட்சியின் மாநில கவுன்சிலர்களில் ஒருவரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யி தெற்காசிய நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் செய்ய இருப்பதாகவும், அப்போது அவர் இந்தியா வருவார் என்றும், இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன என இருநாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வரும் பட்சத்தில், கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் லடாக் பகுதியில் இருநாட்டு எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராணுவத் துருப்புகளை திரும்ப பெறுவதற்கான உடனடி தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.
ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், சீனா வெளியுறவு அமைச்சர், நேரடியாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திக்க வருவதற்கு பின்னணியில் போர் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவைப் போலவே சீனாவும் போருக்கான ராஜதந்திர முடிவையே நாடுகிறது. உக்ரைன் விவகாரத்தால் உலகில் உருவாகியுள்ள நெருக்கடியில் இரு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளன.
இந்தச் சந்திப்பின்போது, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் அந்நாடு சந்தித்து வரும் நெருக்கடியில் இருந்து ரஷ்யாவிற்கு உதவுவது குறித்து ரஷ்யா- இந்தியா-சீனா குழுவின் உடனடி சந்திப்பிற்கு வாங் யி அழுத்தம் தரலாம்.
சீனா வெளியுறவு அமைச்சர், இந்த மாதம் 26-ம் தேதி நேபாளம் வரலாம் என காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ள நிலையில், வாங் யி-ன் வருகை குறித்த பேச்சு இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. வருகை உறுதி படுத்தப்பட்ட பின்னர் சீனா அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவத் துருப்புகள் நிறுத்தப்பட்டதிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் பல முறை நேரிலும்,தொலைப்பேசி வாயிலாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருந்த போதிலும் இரு நாடுகளும் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவத் துருப்புகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment