Published : 16 Mar 2022 09:55 AM
Last Updated : 16 Mar 2022 09:55 AM

'புதின் ஒரு போர்க் குற்றவாளி' - ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது அமெரிக்க நாடாளுமன்றம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர்க்குற்றவாளி என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அமெரிக்க நாடாளுமன்றம். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது என்பது அரிதினும் அரிது. அமெரிக்க நாடாளுமன்றம் எப்போதும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கும். ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிரி புதின் போர்க் குற்றவாளி என்ற தீர்மானத்தை ஏக மனதாக அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை குடியரசுக் கட்சி எம்.பி. லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவருமே ஆதரித்தனர். இத்தீர்மானம், ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்னும் பிற நாடுகளும் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் உள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க ஊக்க சக்தியாக அமையும்.

சக் ஸ்கூமர்

இந்தத் தீர்மானம் குறித்து ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சக் ஸ்கூமர் அவையில் பேசுகையில், "இந்த அவையில் உள்ள அனைவரும் இன்று ஒரு விஷயத்தில் உடன்பட்டுள்ளோம். ஜனநாயகவாதிகள், குடியரசுவாதிகள் என்ற பாகுபாடில்லாமல் ஒன்றுபட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர்க் குற்றவாளி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். உக்ரைன் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள வன்முறைகளுக்கு புதின் பொறுப்பேற்றே ஆக வேண்டும். அதிலிருந்து நிச்சயமாக புதினால் தப்பிக்க முடியாது" என்றார்.

கடந்த பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது தாக்குதலை அறிவித்த ரஷ்ய அதிபர் புதின், "இது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை. உக்ரைனை நாஜிகளற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கை. உக்ரைன் தற்போது அமெரிக்காவின் காலனியாக, அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x