Published : 16 Mar 2022 09:30 AM
Last Updated : 16 Mar 2022 09:30 AM

உக்ரைன் போரின் 21வது நாள்.. இழப்புகளால் தள்ளாடும் ரஷ்யப் படைகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இன்றுடன் (மார்ச் 16) 21 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் போரில் அதிகளவில் வீரர்கள், தளவாடங்களை இழந்ததால் ரஷ்யப் படைகள் தள்ளாட்டம் கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் தாக்குதலில் இழப்புகளை சந்தித்துள்ள ரஷ்யா தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து படை வீரர்களைக் கொண்டுவந்து போரில் ஈடுபடுத்த முயன்று வருகிறது. எங்களுக்குக் கிடைத்துள்ள அண்மைத் தகவலின்படி ரஷ்யா எதிர்த்து சண்டையிட திணறி வருகிறது. உக்ரைன் நிலையான பதிலடியைக் கொடுத்துவரும் நிலையில் நாளுக்கு நாள் ரஷ்யாவுக்கு சவால் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரஷ்யா தனக்கு உதவியாக சிரியாவிலிருந்து 40,000 வீரர்களை களமிறக்கி உக்ரைன் எல்லையில் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யதார்த்தமான பேச்சுவார்த்தை தேவை: இதற்கிடையில், "ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தொடரும் ஆனால் ரஷ்யா சற்றே தனது கோரிக்கைகளை யதார்த்தமானதாக நடைமுறை சாத்தியமானதாக வடிவமைக்க வேண்டும். உக்ரைன் நலன் கருதி பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட இன்னும் சிறிது அவகாசம் வேண்டும் என்றார். மேலும், உக்ரைன் வான்பரப்பை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்க வேண்டும் ரஷ்யாவை தண்டிக்க இன்னும் அதிகளவில் போர் தளவாடங்கள் வேண்டும்" என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா தலைவர்கள் சந்திப்பு.. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் தலைநகர் கீவுக்கு நேற்று போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாட்டுப் பிரதமர்கள் சென்றனர். அவர்கள் ரயிலில் நீண்ட பயணம் மேற்கொண்டு கீவ் நகரை அடைந்தனர். அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி, மதிப்பிற்குரிய தலைவர்கள், ஐரோப்பாவின் சுதந்திர நாடுகளின் தலைவர்களான இவர்கள் அச்சமின்றி எங்கள் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட நண்பர்களுடன், அண்டை நாட்டவருடன், எங்களால் நிச்சயமாக தோற்கடிக்க முடியும். யாரை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டுமா? நம் அனைவருக்குமே தெரியுமே! என்று கூறியுள்ளார்.

போலந்து பிரதமர்

உங்களை தனியாக விடமாட்டோம்.. போலந்து பிரதமர் மடேஸ் மொராவியேகி, உக்ரைன் நிச்சயம் தனித்து விடப்படாது. ஏனெனில் நீங்கள் உங்களுக்காக மட்டும் போராடவில்லை. உங்கள் சுதந்திரம், பாதுகாப்பு தாண்டி அண்டை நாடுகளின் பாதுகாப்புக்காகவும் போராடுகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

புதின் 'போர் குற்றவாளி'.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது என்பது அரிதினும் அரிது. அமெரிக்க நாடாளுமன்றம் எப்போதும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கும். ஆனால், முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிரி புதின் போர்க் குற்றவாளி என்ற தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x