Published : 15 Mar 2022 07:23 PM
Last Updated : 15 Mar 2022 07:23 PM

குடியிருப்புகளில் தாக்குதல்... கலக்கத்தில் ஏழை நாடுகள்... ரஷ்ய படைகளால் உருக்குலையும் உக்ரைன் - 10 அண்மைத் தகவல்கள்

கீவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

கீவ்: உக்ரைனில் தலைநகரான கீவ் நகரிலுள்ள உள்ள 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளன. 20-வது நாளில் போர் உக்கிரமாகியுள்ள நிலையில், உக்ரைன் நிலவரம் தொடர்பான முக்கிய 10 அப்டேட் தகவல்களைப் பார்ப்போம்.

குடியிருப்புகளைத் தாக்கி வரும் ரஷ்யா: உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், கீவ் அருகில் உள்ள நகரத்தின் 15 மாடி குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் உள்ளே சிக்கியுள்ளனர். அந்தக் கட்டிடத்திலிருந்து பெரும் தீ ஜுவாலைகள் வெளியேறி அந்தப் பகுதியே புகை மண்டலமாக கட்சியளித்தன. மீட்பு குழுவினர் கட்டிடத்தில் இருந்து ஏணிகள் வழியாக மக்களை வெளியேற்றி வருகின்றனர். ரஷ்யா படைகள் பீரங்கிக் கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

போர் ஏழைநாடுகளை பாதிக்கிறது - ஐ.நா. எச்சரிக்கை: ’உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் உலகப் பொருளாதரம் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக வளரும் ஏழை நாடுகளில் உணவு, எரிபொருள், உரங்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. இந்தப் போர் ஏழை நாடுகளை கடுமையாக பாதித்துள்ளன’ என ஐ.நா சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.

”உலகின் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் 50 சதவீதம், கோதுமை உற்பத்தியில், 30 சதவீதம் ரஷ்யாவும் உக்ரைனும் பங்களிப்பு செய்கின்றன.உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடமிருந்து 45 ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் மூன்றில் ஒரு பங்கு கோதுமைத் தேவையை இறக்குமதி செய்கின்றன. அவற்றில் 18 நாடுகள் தங்களின் 50 சதவீத கோதுமைத் தேவைக்கு இந்த இரு நாடுகளையே சார்ந்துள்ளன. ரஷ்யாவின் போர், அமைதியின்மைக்கும் அரசியல் உறுதியின்மைக்கும் விதை தூவுகின்றது” என்று ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்

உக்ரைன்- ரஷ்யா பேச்சுவார்த்தை தொடரும் - ஜெலன்ஸ்கி: உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். வீடியோ ஒன்றின் மூலம் பேசிய அவர், "திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் அதிகாரிகள் நன்றாக செயல்பட்டனர். போரை விரைவாக நிறுத்துவதற்கும், நேர்மையான அமைதியை நிலைநிறுத்துவதற்குமான முயற்சியின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட்டிடம் பேசினேன். அமைதியான தீர்வுக்கு மத்தியஸ்தம் செய்ய முயன்ற அவர் புதினிடமும் பேசினார்” என்றார். ரஷ்யாவின் முக்கியத் தொலைக்காட்சியில் மாலை நேர செய்தி ஒளிபரப்பின்போது, உக்ரைன் போருக்கு எதிரான சுவரொட்டியுடன் ஒளிபரப்பிற்கு இடையில் ஓடிய ரஷ்ய தொலைக்காட்சி ஊழியரைப் பாராட்டிய ஜெலன்ஸ்கி, ”போரை நிறுத்துங்கள் நான் உங்களுக்கு உயிர்வாழ ஒரு வாய்ப்புத் தருகிறேன்" என ரஷ்ய வீரர்களுக்குத் தெரிவித்தார்.

மரியுபோலில் ரஷ்ய படைகள் பின்வாங்குகின்றன - உக்ரைன்: உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை முறியடித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு ராணுவ ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இழப்புகளைச் சந்தித்த ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவம் கடந்த ஒன்றரை வாரங்களாக, 4,30,000 பேர் வசித்து வந்த அசோவ் கடலின் துறைமுக நகரமான மரியுபோலைத் தாக்கி வந்தது. ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் 2,500 அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மே மாத தொடக்கத்தில் போர் முடிவுக்கு வரலாம்: "தனது அண்டை நாட்டைத் தாக்கி வரும் ரஷ்யா தாக்குதலுக்கான வளங்களை இழக்கும் நிலையில், மே மாதத்தின் தொடக்கத்தில் இந்தப் போர் முடிவுக்கு வரும்" என உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரியின் ஆலோசகர், ஒலெக்சி அரெஸ்டோவிச் தெரிவித்துள்ளார். உக்ரைன் ஊடகங்களில் வெளியான வீடியோவில் பேசியுள்ள ஒலெக்சி, "இந்தத் தாக்குதலுக்கு எவ்வளவு வளங்கள் உள்ளன என்பதை பொறுத்து போர் முடியும் சரியான நேரம் உறுதியாகலாம். என்னைப் பொறுத்த வரையில், மே மாத இறுதி அல்லது அதற்கு முன்னதாக நாம் ஒரு உடன்பாட்டை எட்டலாம் என நம்புகிறேன்" என்றார்

மருத்துவமனை தாக்குதலில் சேயுடன் தாய் மரணம்: கடந்த வாரத்தில் மகப்பேறு மறுத்துவமனையின் மீது நடந்த ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்து ஸ்டெக்சரில் எடுத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி தனது சேயுடன் மரணமடைந்தார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா கடந்த புதன்கிழமை மரியுபோல் நகரின் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் மீது குண்டு வீசித் தாக்கியது. இதில் அந்த கர்ப்பிணிப் பெண் இடுப்பில் காயமடைந்தார். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் பெரிதும் முயன்றனர்.

இந்த மருத்துவமனையை, உக்ரைன் பிரிவினைவாதிகள் தங்களின் தளமாக பயன்படுத்தி வந்தனர். அந்த மருத்துவமனையில் நோயாளிகளோ, மருத்துவர்களோ அனுமதிக்கப்படவில்லை என தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்கொடைக்காக கிரிப்டோகரன்சி வலைதளம் அறிமுகம்:

கிரிப்டோ நிறுவனங்களான, FTX மற்றும் Everstake இணைந்து உக்ரைன் அரசாங்கம் வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து போராடடி வரும் உக்ரைன் அரசின் மத்திய வங்கிக்கு நன்கொடை அளிக்க முடியும். "உக்ரைனின் பாதுகாப்பில் கிரிப்டோகரன்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்று உக்ரைனின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் துணை அமைச்சர் ஒலெக்ஸாண்ட்ரே போர்னியாகோவ் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பேச்சு வார்த்தை ஒருபக்கம், தாக்குதல் மறுபக்கம்: ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில், உக்ரைனின் கீவ் மற்றும் பிற நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காணொளி மூலமாக இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகளும் நான்காவது கட்டப்பேச்சு வார்த்தை நடத்தினர். பலமணி நேர விவாதங்களுக்கு பின்னர் முக்கிய உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இது குறித்து உக்ரைன் அதிபரின் உதவியாளர், "தொழில்நுட்ப காரணங்களால் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்" என்றார்

உக்ரைன் விவகாரம் சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு சீனா உதவக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் மூத்த சீன வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யாங் ஜீச்சி ஆகியோர் ரோமில் சந்தித்தனர். அப்போது ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளின் பாதிப்பிலிருந்து அந்த நாடு மீண்டு வர, சீனா ரஷ்யாவிற்கு உதவக்கூடாது என அமெரிக்கா கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ரஷ்யா சீனாவிடம் ராணுவ உதவிகள் உள்பட பல்வேறு உதவிகளை கேட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போட்டியில் அடுத்த நிலையை அடைய உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை சீனா பயன்படுத்தலாம் என அமெரிக்கா நினைக்கிறது. அதனால் உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதுகுறித்து சீனத் தரப்பில், உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா தவறான தகவலை பரப்பி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனா ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போருக்கு எதிராக வலுக்கும் ரஷ்ய குரல்கள்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு சொந்த நாட்டு மக்களிடமே எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஏற்கெனவே ரஷ்ய விமான பயணத்தில், பயணிகளிடம் பேசிய விமானி, உக்ரைன் மீதான தாக்குதல் ஒரு குற்றம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலையில் ரஷ்யா தொலைக்காட்சி ஒன்றில் மாலை செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது, செய்தி வாசிப்பாளருக்கு பின்னால் போருக்கு எதிரான போஸ்டருடன் பெண் ஒருவர் தோன்றினார். அதில், "போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரச்சாரங்களை நம்பாதீர்கள், இவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள்" என ரஷ்யன், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

தொடரும் தாக்குதலும் பேச்சுவார்த்தையும்:

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருநாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நம்பிக்கைகள் அதிகரித்தன. ரஷ்யா ஏற்கெனவே ஆக்கபூர்வமாக பேசத் தொடங்கியுள்ளது. சில நாட்களில் நாங்கள் சில முடிவுகளை நாங்கள் எட்டுவோம் என உக்ரைன் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மைக்கைலோ பொடோலியாக் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், போலந்து எல்லையில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள உக்ரைனின் யாவோரிவ் சர்வதேச அமைதி மையத்தின் மீது ரஷ்யா ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இதில் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 134 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், "180 வெளிநாட்டு கூலிப்படையினர்" மற்றும் ஏராளமான வெளிநாட்டு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதின் கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாத பகுதிகளை அங்கிகரீத்து, அங்கு அமைதியை நிலவச் செய்யும் பொருட்டு தனது நாட்டு துருப்புகளை பிப்ரவரி 21-ம் தேதி உக்ரைன் எல்லையில் நிலை நிறுத்திய பின்பு போர் பதற்றம் அதிகமானது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24-ம் தேதி, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்து புதின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து 20 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையே நான்காவது கட்டப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x