Published : 09 Mar 2022 03:30 PM
Last Updated : 09 Mar 2022 03:30 PM
கீவ் : "நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்காக இனி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. உக்ரைனை ஏற்றுக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை" என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவத்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்றாக உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணையக் கூடாது என்பது கூறப்பட்டது. உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து 14 நாட்களாக இன்றும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஏபிசி நியூஸிற்கு உக்ரைன் அதிபர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
"நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் இனியும் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. உக்ரைனை ஏற்றுக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை. இதை புரிந்து கொண்ட பின்னர் நீண்ட நாட்களுக்கு முன்பே நாங்கள் அமைதியாகி விட்டோம்.
சர்ச்சைக்குரிய முரண்பாடுகளுக்கும் ரஷ்யாவுடனான மோதலுக்கும் அந்த கூட்டணி அஞ்சுகிறது. நான் மண்டியிட்டுக் கெஞ்சும் தேசத்தின் அதிபராக இருக்க விரும்பவில்லை. அதனால் இனியும் அது குறித்து கோரிக்கைகளை முன்வைக்கப் போவதில்லை." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, கிழக்கு உக்ரைனின் கிழக்கு பிரந்தியத்தில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றை ரஷ்யா இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக அறிவித்திருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, " இந்த இரு பகுதிகளையும் ரஷ்யா தவிர வேறெந்த உலக நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. அதனை சுதந்திர நாடாக அங்கீகரப்பதற்கு முன்பாக அந்த மக்கள் எந்த நாட்டைச் சார்ந்திருக்க விரும்புகிறார்கள் என அறிய வேண்டியது முக்கியம். இந்தப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். வெளிப்படையான பேச்சுவார்த்தை, சமரசத்துக்கு தயாராகவே இருக்கிறேன்.
ரஷ்ய அதிபர் புதின் இறுதி எச்சரிக்கைகளை விட்டுவிட்டு பேச்சுவார்த்தையை தொடங்கலாம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT