Published : 09 Mar 2022 09:14 AM
Last Updated : 09 Mar 2022 09:14 AM
கீவ்/ மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இன்றுடன் 14 வது நாள். உக்ரைனில் விமான நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், மருத்துவமனைகள், அணுமின் நிலையம், துறைமுகங்கள் எனப் பல உட்கட்டமைப்புகளும் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தாக்குதலின் 14வது நாளில் சில முக்கியத் தகவல்களை அறிவோம்:
1. ரஷ்யாவில் இருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியனவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட பைடன், உக்ரைன் போர் ரஷ்யாவுக்கு வெற்றி தராது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்த ஆண்டு இறுதியிலிருந்து நிறுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
2. இதுவரை நேட்டோவிடம் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று தொடர் கோரிக்கைகளை முன்வைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இனியும் நேட்டோ உறுப்பினர் அந்தஸ்துக்காக போராடப்போவதில்லை. இந்த விஷயத்தில் மண்டியிட்டு கெஞ்சும் அதிபராக இருக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க உளவுத்துறை தலைவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஆத்திரக்கார தலைவர், உக்ரைன் படையெடுப்பு தான் எண்ணியதுபோல் முன்னேறததால் மேற்கத்திய நாடுகளை அணு ஆயுதப் போர் என்ற எச்சரிக்கைகளால் அச்சுறுத்த முயல்பவர் என்று விமர்சித்துள்ளார்.
4. உக்ரைனுக்கு MiG-29 போர் விமானங்களை அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து அனுப்ப வேண்டும் என்ற போலந்தின் யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இது நேட்டோ கூட்டமைப்புக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என்று அமெரிக்கா விளக்கியுள்ளது.
5. மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு 500 மில்லியன் யூரோ வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதுவரை உக்ரைனிலிருந்து 2 மில்லியன் மக்களை அகதிகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
6. ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் என்ற சர்வதேச நாணய மதிப்பீட்டு நிறுவனமானது ரஷ்யாவின் நாணய மதிப்பீட்டை பி தரத்தில் இருந்து சி யாக குறைத்துள்ளது.
7. மெக்டொனாஸ்ல்ட்ஸ், கோகோ கோலா, ஸ்டார்பக்ஸ் ஆகிய உணவு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் செயல்பாட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
8. பிபிசி செய்தி நிறுவனம் ரஷ்யாவிலிருந்து ஆங்கில செய்தி ஒலிபரப்பை மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக ரஷ்யாவின் அவசரச் சட்டத்தால் ரஷ்யாவுக்குள் இருந்து செய்தி வெளியிடுவதை நிறுத்துவதாக பிபிசி அறிவித்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பின் மூலம், போர்ச் சூழலில் ரஷ்யாவுக்குள் இருந்து செய்தி வெளியிடுவது அவசியம் எனக் கருதி சேவையைத் தொடங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளது.
9. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம், உக்ரைனிலிருந்து கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு 12 நாட்களில் 20 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள், முதியோ.
10. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் சந்தித்து ரஷ்யாவிடம் எரிபொருளுக்காக சார்ந்திருக்காமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT