Published : 05 Mar 2022 02:30 PM
Last Updated : 05 Mar 2022 02:30 PM

சுமியில் சிக்கியுள்ள மாணவர்களை செஞ்சிலுவை சங்க உதவியுடன் மீட்க இந்திய தூதரகம் தீவிர முயற்சி

கீவ்: ''தைரியமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்'' என்று சுமியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு தூதரகம் நம்பிக்கை ஊட்டியுள்ளது.

கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் போர்ப் பதற்றத்திற்கு இடையில் சிக்கியிருக்கும் சுமார் 1,000 இந்தியர்களை மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அதிகாலை உக்ரைனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில், "உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். செஞ்சிலுவை சங்க மத்தியஸ்தர்கள் மூலம் உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக இந்திய மாணவர்களை மீட்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம். அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்படும் வரை கட்டுப்பாட்டு அறைகள் உயிர்ப்புடன் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, சுமி பல்கலைகழக பகுதியில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் வெளியிட்ட வீடியோவில், ”ஏறத்தாழ 900 பேர் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் அங்குள்ள விடுதிகளில் பதுங்கி இருக்கிறோம். வெளியில் நடுங்க வைக்கும் குளிர் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல் நடக்கிறது. எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள்.

நாங்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால், எந்தத் தகவலும் இல்லை. இங்கிருந்து எல்லை 50 கி.மீ தொலைவில் இருக்கும். ரஷ்ய எல்லைப் பகுதியில் பேருந்துகள் நிற்பதாக தகவல் சொல்கிறார்கள். அங்கு நடந்து செல்லவேண்டுமென்றால், எல்லா திசைகளில் இருந்தும் வெடிகுண்டுகள் வருகின்றன. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இதுவே நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே... எங்களை எப்படியாவது இங்கிருந்து வெளியேற்றி விடுங்கள். இல்லையென்றால் நாங்கள் கொல்லப்படுவோம். தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள்” என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இந்தச் சூழலில் தான் உக்ரைனுக்கான இந்திய தூதரகம், ”தைரியமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று சுமியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு தூதரகம் நம்பிக்கை ஊட்டியுள்ளது. மீட்புப் பணிகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றியும் அந்த ட்வீட்டில் விளக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x